அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 1

Akbar and Birbal Stories / Part – 1

இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள்.

.

  • காகங்களின் எண்ணிக்கை
  • மூன்று கேள்விகள்
  • ஆந்தைகளின் மொழி / அரசர் தவறை சுட்டிக்காட்டும் பீர்பால்
  • கொடுக்கும் கை கீழே! வாங்கும் கை மேலே!

.

காகங்களின் எண்ணிக்கை 

அக்பர் பீர்பால்

அந்த நாட்டில் மன்னர் எப்போதுமே உயர்ந்தவர். அவர் அவரின் நாட்டில் யாரை வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க்கலாம். பதில் அளிக்காதவர்களுக்கு என்ன தண்டனைகள் வேண்டும் என்றாலும் கொடுக்கும் அதிகாரம் மன்னனுக்கு உண்டு. எனவே அந்த நாட்டு மக்கள் மன்னனிடம் எப்போதுமே மிகுந்த எச்சரிக்கையுடன் தான் பேசுவார்கள், பழகுவார்கள். ஆனால் நம் பீர்பால் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தன புத்திசாலி தனத்தால் எப்போதும் மன்னனிடம் பதில் கொடுத்து, அதற்கு பாராட்டையும் வாங்கி விடுவார்.

இதே போல தான் ஒருமுறை, பேரரசர் அக்பர் நம் பீர்பாலைப் பார்த்து, ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டார்: “என் ராஜ்ஜியத்தில் எத்தனை காகங்கள் உள்ளன?” என்று. உடனே சிறிதும் தயக்கமின்றி, நம் பீர்பால், “எண்பதாயிரம் காகங்கள் உள்ளன, ஜஹான்பனா” என்று பதிலளித்தார்.

அக்பர் பீர்பால்

“எண்ணிக்கை வேறுபட்டால் என்ன செய்வாய்?” என்று அக்பர் கேட்டபோது, ​​பீர்பால் புத்திசாலித்தனமாக, “எண்ணும் போது அதிகமாக காகங்கள் இருந்தால், அவை தங்கள் உறவினர்களைப் பார்க்க இங்கு வந்திருக்க வேண்டும். குறைவாக இருந்தால், இங்கு இருக்கும் காகங்கள் பல அவற்றின் உறவினர்களைப் பார்க்க வேறு நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும்” என்றார்.

அரசரின் கேள்விகளுக்கு பதில் அளித்த மாதிரியும் ஆகிற்று, அதையும் மன்னர் கோவம் கொண்டு மறுக்க முடியாத படி சரியாக கூறிவிட்டதாகவும் ஆகிற்று, இல்லையா? பிறகு என்ன பீர்பாலுக்கு அரசரிடம் இருந்து பாராட்டு மழை தான்.


மூன்று கேள்விகள்

அக்பர் பீர்பால்

அக்பர் பீர்பாலிடம் வாழ்க்கை, நேரம் மற்றும் மனிதர்களைப் பற்றி மூன்று கேள்விகளைக் கேட்டார். பீர்பாலின் பதில்கள் நிகழ்காலத்தில் வாழ்வது, தற்போதைய தருணத்திற்கு மதிப்பளிப்பது மற்றும் உங்களுடன் இருக்கும் நபர் மீது கவனம் செலுத்துவது ஆகியவற்றை வலியுறுத்தின. அக்பர் பீர்பாலின் ஞானத்தைப் போற்றி, இந்தக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

ஒரு நாள், அக்பர் பீர்பாலை அரசவைக்கு அழைத்து, “பீர்பால், எனக்கு உண்மையாகப் பதிலளி”, என்று கூறிவிட்டு இந்த பூமியில் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியத்துவமா 3 விஷயங்கள் குறித்து 3 கேள்விகளைக் கேட்டார்.

முதல் கேள்வி, ”வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் எது?”. பீர்பால் ஒரு கணம் சிந்தித்து, “வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் நாம் நிகழ்காலத்தில் வாழ்வதுதான். கடந்த காலம் நமக்கு கடந்துவிட்டது. அது திரும்ப வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. எந்த நேரமும் எப்படியும் மாறலாம். ஆனால் நிகழ்காலத்தில்தான் நாம் செயல்படுவதற்கான சக்தி நம்மிடம் உள்ளது. எனவே நிகழ்காலத்தின் தேவையையும், அதன் நிலையையும் நாம் உணர்ந்து வாழ வேண்டும், ” என்றார்.

அக்பர் சிந்தனையுடன் தலையசைத்து, பிறகு, “மனிதனுக்கு மிக முக்கியமான காலநேரம் எது?” என்று இரண்டாவது கேட்டார். பீர்பால் பதிலளித்தார், “இப்போது தான், இந்த நேரம் தான், ஏனென்றால் அது மட்டும் தானே நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நேரம். நம் வாழ்வில் ‘இந்த நேரம் எவ்வாறு அமைய வேண்டும்? இந்த காலநேரத்தை நாம் நமக்குத் தகுந்த படி எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?’ என்பது எல்லாம் நம்முடைய கையில் தான் இருக்கின்றது.

இறுதியாக, அக்பர், “நம் வாழ்வில் மிக முக்கியமான நபர் யார்?” என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டார். இப்போது அரசருடன் தான் இருப்பதால், இதற்கு வழக்கம் போல பீர்பால் புத்திசாலித்தனமான பதிலையே அரசருக்குக் கூறினார் பீர்பால். அவர் புன்னகைத்து, “நாம் யாருடன் இப்போது இருக்கிறோமோ அவர்தான் நமக்கு முக்கியமானவர். ஏனென்றால் இந்தத் தருணத்தில் நாம் மட்டுமே அவருக்கு உதவ முடியும் அல்லது அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்” என்று பதிலளித்தார்.

பீர்பாலின் பதில்களின் ஆழத்தால் ஈர்க்கப்பட்ட அக்பர், நிகழ்காலத்திலும் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீதும் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.


அரசர் தவறை சுட்டிக்காட்டும் பீர்பால்

அக்பர் பீர்பால்

அன்று காலை, அரசர் அக்பர் குதிரைச் சவாரி செய்வதற்கு ஏற்ற உடையை அணிந்து கொண்டு, ஆயுத அறையில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாகவும் இருந்தார். அக்பரைக்கான வந்த பீர்பால், அவரைப் பார்த்த உடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. அக்பர் அன்று வேட்டையாடத் திட்டமிட்டிருக்கிறார். ‘வேட்டையாடுவது’ அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு!. ஆனால் அவர் வேட்டையாடுவது பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் எப்போதும் சிந்திப்பார்.

சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பால். “பொய் சொல்லாதே, பீர்பால்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டையாடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பால். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டைக்கு வர வேண்டும்!” என்றார் அக்பர்.

“தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பால் பதிலளித்தார். “பீர்பால்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பால்.

சற்று நேரத்திற்குப்பின், அக்பர் தன் வேட்டை படையுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பாலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.

திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். அதன் பிறகு படை வீரர்கள் அனைவரும் காட்டில், சிறிது நேரம் அரசர் ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தைச் சுற்றி அமர்ந்து ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பாலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் இப்போது இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.

அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” இன்று கூறினார். அதற்கு பீர்பால், “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார். பீர்பால்  எதோ சொல்ல நினைக்கிறார் என்பதை உணர்ந்த அக்பர், “அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார். உடனே பீர்பால், “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று மணமகனின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை ‘மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும்’ என்று கேட்கிறது. அதற்கு பெண்ணின் தந்தை ‘தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும்’ என்று சொல்கிறது,” என்றார் பீர்பால்.

பின்னர் பீர்பால் மேலும் தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை ‘மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும்’ என்கிறது,” என்றார். அது அக்பருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவே சற்று சிந்தனையுடன், “இது என்ன உளறல்? மிருகங்களே இல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? மேலும் இன்னும் கூட அதிகமாக இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்று கூறினார்.

“அது உளறவில்லை, அரசே! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பால். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது, என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, அரசே! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களே இல்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பால்.

பளீரென முகத்தில் அறைந்தது போல் இருந்த பீர்பாலின் இந்த விளக்கம். அது அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பால்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று இப்போது புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர்.

பீர்பாலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. ‘இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும்’ என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பால்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர்.

“சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள் அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது’ என்று அது கூறுகிறது!” என்று பீர்பால் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார். அரசனின் மனமாற்றம் கண்டு பீர்பாலும் நிம்மதியாக புன்னகை செய்தார்.

.

கொடுக்கும் கை கீழே! வாங்கும் கை மேலே!

அக்பர் பீர்பால் கதைகள்

அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது.

உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர்.

சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர். அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார். மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன்.

ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும்.

ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும், வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால்.

இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.

.

Tags,
அக்பர் பீர்பால் கதைகள், நகைச்சுவை கதைகள், அறிவுரை கதைகள், ஊக்கப்படுத்தும் கதைகள், அக்பர் பீர்பால், புத்திசாத்தனமான கதைகள், Akbar Birbal stories in tamil, humorous stories in tamil, advice stories in tamil, motivational stories in tamil, Akbar Birbal, wise stories in tamil, குழந்தைகள் கதைகள், அரசர் கதைகள், சிறு கதைகள், சிறுவர் கதைகள், Children stories, king stories, short stories, children’s stories,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top