Akbar and Birbal Stories / Part – 2
இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் அடுத்த 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள்.
- சௌகத் அலியின் தண்டனையும் பீர்பால் சமயோசித புத்தியும்
- சத்தியமே வெல்லும்! / தாவூத்தின் வினையும் அவன் முடிவும்
- முதல் வழக்கில் வெற்றி! / குரு தட்சணையும் பீர்பாலின் தீர்ப்பும்
சௌகத் அலியின் தண்டனையும் பீர்பால் சமயோசித புத்தியும்

அக்பர் பீர்பால் கதைகள்
அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி என்பவர் தயாரிக்கும் பீடா அரசருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்று கூறுவான்.
அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன!
ஒருநாள் சௌகத் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார்.
அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த பீர்பால் “சௌகத் அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான்.
“இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் சௌகத் அலி. “அப்படியா?தெரியவில்லையா? எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று பீர்பால் கேட்க, அலியும் ‘என்ன நடந்தது’ என்று கூறினான்.
‘சக்கரவர்த்தி எதற்காக சௌகத் அலியை ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார்’ என்று பீர்பாலுக்குப் புரிந்து விட்டது. உடனே பீர்பால் சௌகத் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு, பிறகு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான்.
உடனே சௌகத் அலி “என்னப்பா! நான் ஏற்கெனவே யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் இன்னும் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்று கூறினான்.
வேறு ஒன்றும் கூறாமல், “இன்று ஒருநாள் மட்டும் இதை செய்” என்று சொல்லிவிட்டு பீர்பால் சென்று விட்டான்.
‘பீர்பால் ஏதேனும் சொன்னால், அதில் ஏதோ காரணம் இருக்கும்’ என்று நம்பிய சௌகத் அலியும், அப்போதே வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.
சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.
கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார்.
“இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி பீர்பாலின் பெயரைக் கூறினான். உடனே பீர்பால் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பால்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார்.
“பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பால்.
“அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பால்.
பீர்பாலின் சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் சௌகத் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றுவிட்டார்.
நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை எவ்வளவு தான் நம்மை கீழ்நிலைக்கு கொண்டு சென்றாலும் அதில் இருந்து விடுபட அல்லது வெளியேற நமக்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு வழி கிடைக்கும். நாமே வாய்ப்பை உருவாக்கி கொள்ளவில்லை என்றாலும் கூட, குறைந்த பட்சம் வரும் வாய்ப்பை பற்றிக் கொள்ளவாவது நாம் முயற்சி செய்தாலே போதும், கண்டிப்பாக நம் இல்லாமை நிலை மாறிவிடும்..
சத்தியமே வெல்லும்! / தாவூத்தின் வினையும் அவன் முடிவும்

அக்பர் பீர்பால் கதைகள்
அக்பரின் அரசவையில் இருந்த மந்திரிகளில் பீர்பாலும் ஒருவர். ஆனாலும் எல்லோரையும் விட பீர்பாலிடம் மட்டுமே அக்பர் மிகவும் அன்பு கொண்டு இருந்தார். இதனால் பீர்பால் மீது அரசவையில் இருந்த பலர் பொறாமை கொண்டிருந்தனர்.
ஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூற, தாவூத் என்பவர் பீர்பாலை அவமானப்படுத்த தன்னிடம் ஓர் அருமையான திட்டம் இருப்பதாகக் கூறினார்.
“பீர்பாலைப்பற்றி தவறாக எது சொன்னாலும் சக்கரவர்த்தி நம்பமாட்டாரே!” என்று மற்ற மந்திரிகள் சந்தேகம் எழுப்ப, “சொல்கிற விதத்தில் சொன்னால், சக்கரவர்த்தி கட்டாயம் நம்புவார்” என்று தாவூத் அடித்துக் கூறினார். உடனே மற்றவர்கள் தாவூதை உற்சாகப்படுத்தினர்.
“என் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்!” என்று தாவூத் கூற, “அது என்ன?” என்று மற்றவர்கள் கேட்டனர்.
“நாளைக்கு நீங்கள் அனைவரும் வழக்கப்படி குறித்த நேரத்தில் அரசவை வந்து சேருங்கள். நான் மட்டும் தாமதமாக வருவேன். நான் ஏன் வரவில்லை என்று சக்கரவர்த்தி உங்களைக் கேட்பார். உடனே நீங்கள், “தாவூத் ஒரு பயங்கரமான குற்றத்தைத் தன் கண்களால் பார்த்து விட்டார். அது அவருடைய மனத்தை மிகவும் பாதித்து விட்டது. அதனால் அவர் தாமதமாக வருவார்” என்று சொல்லிவிடுங்கள். பிறகு நான் வந்து அது என்ன என்று அரசரிடம் விளக்கிக் கூறுவேன்” என்று கூறினார் தாவூத்.
அனைவரும் அதற்கு சம்மதித்தப் பின் வீடு திரும்பினர். மறுநாள், அரண்மனையில் அரசவை கூடியது. பீர்பல் உட்பட மற்ற மந்திரிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அரசவைக்கு வந்து விட்டனர். தாவூத் மட்டும் வரவில்லை. அக்பர் அரசவையில் நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணக்கம் வைத்தனர். அக்பரும் புன்னகைத்தபடி தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அனைவர் மீதும், தன் பார்வையை செலுத்தினர்.
அதற்குள் ஒருவன் எழுந்து, “பிரபு! தாவூத் இன்று தாமதமாக வருவதற்குத் தங்களிடம் அனுமதி கோரியுள்ளார்!” என்றார். “தாமதமாக வர என்ன காரணம்?” என்று அக்பர் கேட்டார். “ஒரு பயங்கரமான குற்றம் தன் கண் முன்னே நடக்கக் கண்டார். இதனால் அவருடைய உடல் சோர்ந்து விட்டது. ஆகையால் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார்!” என்றார் அவர்.
சற்றுநேரத்தில் தாவூதே வந்து சேர்ந்து விட்டார். உடனே அக்பர் அவரைப் பார்த்து, “ஒரு பயங்கரமான குற்றம் நிகழ்வதை நீ பார்த்தாயாமே!” என்று கேட்டார். “ஆம் பிரபு!” என்றார் தாவூத். “அது என்ன குற்றம்? உடனே சொல்! யார் அந்தக் குற்றவாளி?” என்று அக்பர் சீறினார்.
“அதை எப்படி என் வாயால் சொல்வேன் பிரபு? உங்களுடைய மிகுந்த நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமான அவரைப் பற்றி என் வாயினால் எப்படிச் சொல்வேன் பிரபு? அதைக் கேட்டால், உங்கள் மனம் மிகவும் புண்படுமே!” என்று தாவூத் நாடகமாடினார்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்! அவன் யாராயிருந்தாலும் சரிதான்! அவன் யாரென்று உடனே சொல்!” என்று அக்பர் உறுமினார்.
“வேறு யாருமில்லை பிரபு! உங்களுடைய பீர்பால் தான் அது!” என்றதும் அக்பர் அதிர்ச்சியுற்றார். பீர்பாலும் அதிர்ச்சியுற்றார். ஆனால் பீர்பால் உடனே விஷயத்தைப் புரிந்து கொண்டார். தன் மீது வீண் பழி சுமத்த தாவூத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிந்து விட்டது.
“என்ன பீர்பாலா?” என்று மிகுந்த வியப்புடன் அக்பர் கேட்டார்.
“ஆம், பிரபு! நான் என் கண்களினால் கண்டதைச் சொல்கிறேன்! நேற்று மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், எனக்கு சற்றுத் தொலைவில் பீர்பால் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் குனிந்து தரையில் கிடந்த ஒரு தங்க மாலையைப் எடுத்தார். பிறகு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்த பின், மாலையைத் தன் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அங்கு மிகுந்த பதற்றத்துடன் வந்த ஓர் இளைஞன் “என் தங்க மாலை வழியில் இங்கே எங்கோ விழுந்து விட்டது. அதைப் பார்த்தீர்களா?” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்று தாவூத் அழகாகத் தான் கற்பனை செய்து வந்த கதையைக் கூறினார்.
அக்பர் கோபமாக, “பீர்பால், இவர் உன்னைப் பற்றிக் கூறுவது உண்மையா?” என்று கத்தினார். “இல்லை பிரபு! நான் மாலை நேரத்தில் அங்கு வந்தது உண்மை! ஆனால் இவர் குறிப்பிட்டது போன்ற சம்பவம் எதுவும் அப்போது நிகழவில்லை” என்றார் பீர்பால்.
“பிரபு! பின் நான் என்ன பொய்யா சொல்கிறேன்? பீர்பால் மறைக்கிறார். நான் சொல்வது சத்தியம்!” என்றார் தாவூத்.
“பீர்பால் எடுத்ததை நிரூபிக்க வேறு சாட்சிகள் இல்லாதபோது, நீ கூறுவதை நான் எப்படி நம்ப முடியும்?” என்று அக்பர் தாவூதை கேட்டார்.
“அதற்கு ஒரு சோதனை செய்து பார்க்கலாம். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நான் எடுத்து வருகிறேன். அதை தன் கையில் பீர்பால் பிடித்துக் கொள்ளட்டும். அவர் சத்தியவான் என்பது உண்மையானால், அந்தக் கம்பி அவரைச் சுடாது!” என்றார் தாவூத்.
அதைக் கேட்ட பிறகு பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால், நீ இந்த சத்திய சோதனைக்கு உட்பட்டேயாக வேண்டும்! நீ ஒரு நிரபராதி என்பதை நீ நிரூபித்துக் காட்டு! நீ சொல்வது சத்தியம் என்பதை அப்போதுதான் எல்லாரும் நம்புவார்கள்” என்றார்.
பீர்பாலின் மூளை வெகு விரைவாக வேலை செய்தது. உடனே அவர், “பிரபு! அந்த சத்திய சோதனைக்கு நான் தயார்! ஆனால் என் மீது குற்றம் சாட்டும் தாவூத் அவர்களும் தான் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.
“அது எப்படி? அவர் என்ன செய்ய வேண்டும்?” என்று அக்பர் கேட்டார். “பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை தாவூத் முதலில் தன் கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு என்னிடம் தர வேண்டும்!” என்றார் பீர்பால்.
அதுகேட்டு, அடிபட்ட நாயைப் போல் தாவூத் வீல் என்று கத்தினார்.
“ஐயோ! அது என்னால் முடியாது!” என்று அலறினார். “ஏன் முடியாது? நீ சொல்வதை நிரூபிக்க நீயும் அந்த சோதனைக்கு ஆளாக வேண்டும்” என்றார் பீர்பால். உடனே தாவூத் அக்பரை நோக்கி, “பிரபு! என்னை மன்னித்து விடுங்கள்! சங்கிலியை எடுத்தது பீர்பால் இல்லை. நான் தவறாகச் சொல்லிவிட்டேன்” என்று கூறி அவர் கால்களில் விழுந்து புலம்பினார்.
“பீர்பால் மீது பொய்க்குற்றம் சாட்டிய இந்த அயோக்கியன் தாவூதை சிறையில் அடையுங்கள்” என்று காவலர்களுக்கு உத்தரவிட்ட அக்பர், பிறகு பீர்பால் பக்கம் திரும்பி, “என்னை மன்னித்து விடு பீர்பால்! நான் கூட உன்னை ஒருக்கணம் சந்தேகப்பட்டுவிட்டேன்” என்றார்.
நம் தமிழில் ஒரு அழகான, ஆழமான கருத்துடன் ஒரு பழமொழி உண்டு. அதாவது 'தன் வினை தன்னைச் சுடும்' என்பது. அடுத்தவருக்கு நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்தின் பலனும் நம்மை நோக்கி 2 மடங்கு பலனோடு வந்தே தீரும். அது அன்பானாலும் சரி வம்பானாலும் சரி. தீயதை மற்றவருக்கு கொடுக்க நினைத்தால், அந்த எண்ணமே நமக்கு 2 மடங்கு தீயதாக திருப்பி அடிக்கும். அதனால் எப்போதும் நேர் வழியிலேயே செய்வோம்..
முதல் வழக்கில் வெற்றி! / குரு தட்சணையும் பீர்பாலின் தீர்ப்பும்

அக்பர் பீர்பால் கதைகள்
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் அரசவையில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, அரசே! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.
பிறகு அரசவையில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பால் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பால்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பால்.
அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!” என்றார் அக்பர்.
உடனே, அரசவையில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?” என்று கேட்டார் அக்பர்.
“அரசே! என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன்.
இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “அரசே! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.
ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.
இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை அரசே! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார்.
“அரசே! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.
“அப்படியானால் இவருடைய குரு தட்சிணை என்ன ஆவது?” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான். பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.
நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த அரசவையில் அவன் உறுதி அளித்துள்ளான். அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!” என்றார். அக்பர் உட்பட அரசவையில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.
ஆனால் பீர்பால் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பாலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பால் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார். பீர்பால் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.
பிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பால் “ஆம் ஐயா!” என்றார் கிழவர். “அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பால். பீர்பாலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.
திடீரென பீர்பால் பிஹாரியை அழைத்து, “பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பால். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.
பீர்பால் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.
“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.
ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பாலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பாலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
.
.
Tags,
அக்பர் பீர்பால் கதைகள், நகைச்சுவை கதைகள், அறிவுரை கதைகள், ஊக்கப்படுத்தும் கதைகள், அக்பர் பீர்பால், புத்திசாத்தனமான கதைகள், Akbar Birbal stories in tamil, humorous stories in tamil, advice stories in tamil, motivational stories in tamil, Akbar Birbal, wise stories in tamil, குழந்தைகள் கதைகள், அரசர் கதைகள், சிறு கதைகள், சிறுவர் கதைகள், Children stories, king stories, short stories, children’s stories, காகங்களின் எண்ணிக்கை, Akabar birbal crow story, the number of crows in akbar’s kingdom,
.
