
கை அக்குள் பகுதிகளிலும் தொடை இடுக்குகளிலும் இருக்கும் அடர்ந்த கருமை நிறங்களை நீக்குவதற்கான செயல்முறைகள்
பொதுவாக பெண்களுக்கு அக்குள் பகுதியில் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமை என்பது சிறிய அளவில் இருந்தால் அது எல்லோருக்கும் இருப்பது தான். இது இயல்பே. சாதாரணமானது தான். கவலை கொள்ள மட்டுமல்ல, அதனை நீக்க மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண உடல் குளியல் மற்றும் உடல் தூய்மை செய்தலே போதுமானது.
ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த கருமை என்பது சாதாரணமாக இல்லாமல், பெரியதாகத் தொடங்கும். நிறமும் அடர்ந்து கருப்பு படரத்துவங்கும். அதே போல எல்லா பெண்களுக்குமே மார்பு பகுதி எடை கூடி லேசாக கீழ் நோக்கி சரியதுவங்கும் போதும் அந்த இடத்தில் ஏற்படும் தோல் உராய்தல் மற்றும் காற்று புகா நிலை காரணமாக அங்கும் நிறம் மாறி கருமை பரத்துவங்கும். குளியல் சோப் போட்டு சுத்தப்படுத்தினாலும் கூட அதை முற்றிலுமாக தவிர்க்கவே முடியாது. அதிலும் சில பெண்களுக்கு பெரிய அளவில் படர்ந்து பார்ப்பதற்கே முகம் சுளிக்க வைக்கும் அளவில் இருக்கும்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு அவர்கள் குட்டை கை வைத்த பிளவுஸ் அல்லது கை இல்லாமல் அணியக்கூடிய உடைகளை அணிந்து கொள்ள இயலாது. ஆசை இருந்தாலும் தவிர்த்து விடுவர். ஏனெனில் கைகளை தூக்கி பேசும் பொழுது தன்னிச்சையாக அந்த இடம் வெளிப்பட்டு சங்கடத்தை ஏற்படுத்தும். இவ்வளவு ஏன் தன் துணைவர்களிடம் கூட அது ஆணோ பெண்ணோ தனக்கான துணைவர்களிடம் கூட சங்கடம் ஏற்பட்டு ‘என்ன செய்வது’ என்று உள்ளுக்குள் ஒரு மருகல் இருக்கும்.
உடலின் அந்தரங்க பகுதிகளில் மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் மற்ற பகுதிகளான கைமுட்டிகள், முழங்கால் முட்டிகள், பாதத்தில் கொலுசு அணியும் இடத்தில் இருக்கும் முட்டிகள், மற்றும் பின் கழுத்துப் பகுதிகளிலும் இந்த கருமை நிறம் மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் இல்லையா?
அக்குள் கருமை எதனால் ஏற்படுகிறது?
சில இடங்களில் ஒன்றோடு ஒன்று உடல் பாகங்களின் தோல்பகுதிகள் உரசும்பொழுது, காற்றுப்படாமல் இருக்கும் பகுதிகளில் வெளிப்படும் வியர்வை துளிகள் அந்த இடத்திலிருந்து நீங்க வழி இல்லாமல் அதே இடங்களில் அங்கு தோல் பகுதிகளில் உள்ள சிறு சிறு துளைகளை அடைத்து அங்கேயே படிந்து விடும்.
அவ்வாறு இல்லை என்றால் அங்கே இருக்கும் முடிகளில் படியும் ஈரப்பதினால் கூட இது ஏற்படலாம்.
தோல் துளைகளில் அடைத்திருக்கும் அழுக்கு நீங்க

முதலில் கருமை நீங்க எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளுக்கு முன்னால் அந்த இடங்களை வெந்நீரில் ஒரு நல்ல பருத்தி துணியை நனைத்து அந்த இடங்களைச் சுற்றி நன்றாக துடைத்தெடுத்தால் அந்த இடங்களில் படிந்து இருக்கும் படிமங்கள் அல்லது அழுக்குகள் தோல் துளைகளில் இருந்து இளகி நீங்க துவங்கிவிடும்.
இதற்குப் பிறகு வழக்கம் போல வீட்டிலேயே இருக்கும் சமையல் பொருள்களைக் கொண்டு நாம் ‘பேஸ்ட்’ தயாரித்து அந்த இடங்களில் பூச ஆரம்பிக்கலாம்.
வீட்டு வைத்தியங்கள் மற்றும் தீர்வுகள்:
இந்த செய்முறைகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை கருமை மாறும் வரை தொடர்ந்து தினமும் செய்து முற்றிலுமாக கருமையை நீக்கி விட்டு, பின்னர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனை தொடர்ந்து செய்து வரலாம். தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் தான் அவ்வப்பொழுது உடம்பில் படியும் கருமையை இது நீக்கிக் கொண்டே வரும். கருமை நீங்கி விட்டது என்று இதை விட்டு விட்டால் திரும்ப உடலில் சேரும் அழுக்கினால் கருமை தோன்றத்தான் செய்யும்.
தேய்த்து மசாஜ் செய்தல்
பொதுவாக சில செய்முறைகள் அந்த பேஸ்ட் ஐ தேவைபடும் இடங்களில் பூசி விட்டு, காய வைத்து, நீரில் உடல் கழுவி விட்டாலே போதும். ஆனால் சில கலவைகள் சாதாரணமாக பூசி மட்டும் விடாமல் அதை தேய்த்து மசாஜ் செய்வதும் அவசியம் ஆகும். அப்படி தேய்த்து மசாஜ் செய்யும் சில முறைகள் கீழே காணலாம்.

ரோஸ் வாட்டரில் ஊற வைத்த கசகசா
- பொடி செய்த சர்க்கரை தேவையான அளவுக்கு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பூசலாம். பூசி விட்டு ‘பயன்படுத்திவிட்டு தூக்கி போட வைத்திருக்கும் எலுமிச்சம் பல தோலி’ன் உட்புறத்தால் நன்றாக அந்தப் பகுதியில் தேய்த்து விடுங்க. இவ்வாறு தேய்த்து விட தேய்த்து விட அந்தப் பகுதி நன்றாக கருமை நீங்க பளிச்சென்று மாற துவங்கும். அடைக்கப்பட்டிருக்கும் தோலின் துளைகளில் இருக்கும் அழுக்குகளும் நீங்கி தோல் பகுதி மென்மையாக மாற துவங்கும்.
- ஒரு கிண்ணத்தில் சிறிது காப்பித்தூள், சிறிது சர்க்கரை, சிறிது எலுமிச்சம் சாறு விட்டு கலந்து, அந்த கலவையை வாரம் இருமுறை பூசி, நன்கு தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து சுத்தப்படுத்தினால் கருமை நீங்கும்.
- ஒரு உருளைக்கிழங்கை தோலுடன் மிக்ஸியில் அரைத்து சாறு பொழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாற்றை மெதுவாக கழுத்தின் பின்புறம் மற்றும் அக்குள் பகுதியில் நன்றாக தேய்த்து ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். விட்டு விடுங்கள் திரும்ப ஒரு 10 அல்லது 15 நிமிடம் கழித்து நன்றாக சுத்தமான துணியால் அல்லது துண்டால் அதை அப்படியே துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் வாரத்திற்கு மூன்று நான்கு முறை இதை செய்தாலே கருமை படர்வது நின்றுவிடும். இதனை வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரம் கூட செய்துவிடலாம்.
- முன்பே பல மணி நேரம் ரோஸ் வாட்டரில் (Rose Water) ஊறவைத்த கசகசாவை, தோலுடன் வெட்டி வைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்து மிக்சியில் போட்டு அதில் சிறிது பசும்பால் விட்டு அரைத்து பேஸ்ட் பதத்துக்கு கொண்டு வந்து விடுங்கள். கருமை இருக்கும் பகுதியில் நீர் வைத்து நன்றாக சுத்தப்படுத்தி விட்டு, அங்கு நாம் இப்போது அரைத்த பேஸ்ட் கலவையைப் பூசி, நன்கு தேய்த்து விடுங்கள். [ தேய் தேய் என்று தேய்ங்கப்பா ] பிறகு சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, நீரால் நன்கு அந்த இடத்தை கழுவி விடுங்கள்.
- சர்க்கரையும், சிறிது தேனும் கலந்து கருமை உள்ள இடங்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட்டு, பின்னர் நீரினால் நன்கு கழுவி விட்டால் கருமை நீங்க தொடங்கிவிடும்.
- மிக்சியில் தோலுடன் துருவி வைத்த உருளைக்கிழங்கு, அதனுடன் சிறிது புளித்த கட்டித் தயிர் மற்றும் ஊற வைத்த கசகசா எல்லாவற்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நன்கு நைசாக அரைத்து எடுங்க. இந்தக் கலவையை கருமை இருக்கும் இடங்களில் அதாவது கை அக்குள் பகுதிகளில் மற்றும் தொடை இடுக்குகளில் நன்றாக தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்க. பிறகு இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து நீர் விட்டு நன்றாக அலசி விடுங்கள்
- பீட்ரூட்டை கழுவி தோல் சீவி லேசாக மட்டும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்க. [ அதிகம் இருந்தால் 1 அல்லது 2 நாட்கள் பிரிஜ் ல் வைத்தும் பயன்படுத்தலாம். ] அதில் தேவையான பீட்ரூட் பேஸ்ட் ஐ மட்டும் எடுத்து, அதனுடன் சிறிது சர்க்கரையை மற்றும் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்துவிட்டு அதை கருமை இருக்கும் பகுதியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்க. பின்னர் நீர் விட்டு அலசி விடலாம். இதை தொடர்ந்து வாரம் 2 முறை செய்து வந்தால் தோலில் கருமை தாங்காமல் நிறம் மாறாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.
- படிகாரக் கல்லை குளிக்கும் போது கருமை உள்ள பகுதிகளில் அல்லது, கருமை வந்துவிடும் என்று நினைக்கும் பகுதிகளில், அல்லது காற்று போகாமல் இருக்கும் உடற்பகுதிகளில் தொடர்ந்து சிறிது நேரம் தேய்த்து வந்தால், அந்த இடங்களில் உள்ள கிருமிகளை மொத்தமாக இந்த படிகாரக் கல் நீக்கிவிடும். அத்துடன் அந்த இடங்களில் ஒரு விதமான சுகந்தமான நறுமணமும் கமலத் தொடங்கும்.

பூசி காயவைத்தல்
- தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் சிறிது எடுத்து, அதில் கல் உப்பை சிறிது போட்டு நன்றாக கரையும் வரை கலந்து விடுங்க. அந்த கலவையை எடுத்து கருமை நிறம் உள்ள கை அக்குள் பகுதியிலோ அல்லது தொடை இடுக்கு பகுதிகளிலோ பூசி, காய வைத்து, சிறிது நேரம் கழித்து உடலை நீரில் கழுவி வந்தால் கருமை நீங்கும்.
- ஒரு கிண்ணத்தில் மிகவும் பழுத்த பாதி எலுமிச்சம் பழம் சாறு கொஞ்சம், ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு [ Corn flour ] அதாவது கார்ன் ஃப்ளார் மாவு, என்று எடுத்து அதில் பசும்பால் தேவையான அளவுக்கு சேர்த்துக் கலக்கி கருமை உள்ள இடங்களில் பூசுங்க. காய விட்டு 10 நிமிடம் கழித்து குளிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்தால் கருமையும் நீங்கும், வாடையும் முற்றும் நீங்கிவிடும்.
- உருளைக்கிழங்கு சாறுடன் கடலை மாவு கலந்து கருமை உள்ள இடங்களில் பூசி, சிறிது நேரம் காய வைத்து குளிக்கலாம்.
- கொஞ்சம் தயிர், சிறிது மஞ்சள் தூள், சிறிது மட்டும் எலுமிச்சம் சாறு 3ம் சேர்த்து கலந்து, தடவி ஒரு 10 நிமிடம் கழித்து உடலை சுத்தம் செய்தால் கருமை நீங்கும்.
- சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிது பேக்கிங் சோடா அல்லது கசகசா தூள், தேன் சிறிதளவு, சிறிது எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்க. குளிப்பதற்கு முன்னால் ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்னால் இதை தடவி ஊற வைத்துவிட்டு குளிக்கலாம். உடலில் இருக்கும் எல்லா கருமை படர்ந்து இருக்கும் இடங்களிலும் இதை பயன்படுத்தலாம். இதனை ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்த அதனுடைய விளைவை நீங்கள் நேரடியாகவே கண் கொண்டு பார்க்கலாம். பூசி குளித்த இடங்கள் கருமை நீங்கி பளிச்சென்று இயல்பான தோலின் நிறத்திற்கு மாறிவிடும்.
- சிறிது பேக்கிங் சோடா எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெயை கலந்து கலக்குங்க. பின்னர் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து கலக்கி விட்டு, அதில் சிறிது சர்க்கரையையும் போட்டு மீண்டும் கலக்குங்க. இந்த கலவையை கருமை இருக்கிற இடங்களில் அதாவது கை கொள்பகுதி பின் கழுத்து பகுதி தொடை இடுக்கு பகுதி ஆகிய இடங்களில் தடவி ஊறவைத்து கழுவி விடலாம். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
- உருளைக்கிழங்கு சாற்றுடன், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து கருமை இருக்கும் இடங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விட கருமை நீங்கும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது ஆலிவ் ஆயில் எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிது கலந்து கருமை இருக்கும் இடத்தில் இரவு படுக்கச் செல்லும் முன்னால் தேய்த்து விட்டு, இரவு அப்படியே இருக்க விட்டு, [ இது சிறிது நசநசப்பு தான் என்றாலும் தூக்கம் நன்கு வரும்.] காலை உடலைக் கழுவிட்டால், சிறிது நாட்களில் கருமை நீங்க தொடங்கிவிடும். இது கருமை நீங்குவதற்கு மிகச்சிறந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத வழிமுறை. அந்த இடங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றமும் சுத்தமாக நீங்கிவிடும். இதை வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு ஒரு முறையேனும் பயன்படுத்தி வரலாம்.
- சிறிது மஞ்சள் எடுத்து, அதில் தேன் கொஞ்சம் பசும்பால் கொஞ்சம் சேர்த்து கலக்கி பேஸ்ட் போல செய்து அக்குளில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவலாம்.
- ஒரு கிண்ணத்தில் சிறிது கடலை மாவு, சிறிது ஆவாரம் பூ பொடி, சிறிது சந்தனம், சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள், கொஞ்சம் தயிர் இவை எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து [ சிறிது பால் கூட தண்ணீருக்கு பதில் சேர்க்கலாம் ] பேஸ்ட் செய்து கருமை உள்ள பகுதிகளில் பூசி காய வைத்து, பின்னர் குளித்தால் வெகுவாக நல்ல பலன் கிடைக்கு.
- [
தொடர்ந்து பூச பூச உடலில் உள்ள அழுக்கு நீங்குவது மட்டுமல்ல வாசமும் வெளிப்படாத துவங்கும். அதுமட்டுமல்ல ஆவாரம் பூ சேர்ப்பதால் தோல் சுருக்கம் நீங்கி தோல் அயன் செய்த பேப்பர் போல மென்மையாக மாறிவிடும். நான் பின் 30 வயதில் 1 வருடம் செய்தேன். திருப்தியான ரிசல்ட் தான். பிறகு நேரம் இல்லை. விட்டுவிட்டேன்.நேரம் இருந்தால் நிதானமாக தினமும் மார்புக்கும் பூசுங்க, தொங்கிய மார்பகம் இழுத்துப்பிடித்தாற்போல ஆகிவிடும்.]
- [
- 11. சிறிது எலுமிச்சை சாற்றுடன், நாட்டு சக்கரை நன்றாக கலந்து வைங்க.
- ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள், சிறிது வேப்பிலை பொடி, சிறிது பேக்கிங் சோடா எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலந்து விடுங்க.
- இரண்டையும் தயார் செய்து வைத்து, முதலில் கரைத்து வைத்த எலுமிச்சை சாறு நாட்டுச் சர்க்கரை கரைசலை எடுத்து அந்த கருமை பகுதியில் நன்கு அழுத்தி பூசி விட்டு, அதன் மேல் இந்த பேஸ்ட் பதத்திற்கு இருக்கும் கடலை மாவு கலவையை எடுத்து பூசி விடுங்க. ஒரு பத்து நிமிடம் வரை வைத்திருந்து அதை கழுவ, கருமை நீங்கும். இதை தினமும் இதை செய்யலாம் என்றாலும், தேவை இல்லை என்று தோன்றினால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கி, பளிச்சென்று தோல் இயல்பான கலருக்கு வருவதுடன் வாடையும் நீங்கி விடும். மேலும் இதில் கஸ்தூரி மஞ்சளும் கலப்பதினால் ஒரு விதமான வாசமும் வெளிப்பட துவங்கும்.

ஒரு பொருள் மட்டும் போதும்
எதற்கு வளவள வென்று ஏதேனும் ஒரு பொருளை மட்டும் சொல்லுங்க…என்று கூறுபவர்களுக்கு கீழே உள்ளவற்றை முயற்சி செய்யலாம். [ முதலில் உடலில் கருமையை முழுவதும் நீக்கிவிட்டு, பின்னர் தொடர்ந்து இதை செய்ய வேண்டும்.]
- வேப்பிலையை நன்கு மசிய அறைத்து அக்குள் பகுதியில் தடவி கழுவி வரலாம். [ இளம் தளிராக இருப்பது தோலுக்கு நல்லது ]
- புளித்த தயிரை அக்குள் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
- உருளைக்கிழங்கு சாறை அக்குள் பகுதியில் தடவி வரலாம். இது கருமையை குறைக்கும்.
- பேக்கிங் சோடாவை சிறிது நீர் விட்டு கலந்து கருமை இருக்கும் இடங்களில் பூசி கழுவி விடலாம். [ இது மிக நல்ல முறை ]
- நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நலுங்கு மாவு கூட பூசி குளிக்கலாம்.
- படிகாரக் கல்லை தினமும் குளிக்கும் போது பயன்படுத்தினாலும் பலன் கிடைக்கும்.
- இந்த படிகார கல்லை தண்ணீரில் சிறிது நாட்கள் போட்டு வைத்து, அதை கைகளில் அவ்வப்போது எடுத்து உருட்டி கொண்டிருந்தால் அதன் மேற்பரப்பில் இருக்கும் சொரசொரப்பான பகுதி தேய்ந்து போய் மிருதுத்தன்மை வந்துவிடும் அதை எடுத்து தேவையான இடங்களில் தேய்த்து குளிக்கலாம்.
- நாட்டு மருந்து கடைகளில் தேய்த்து குளிக்க வெட்டிவேர் கிடைக்கும். கருமை நீங்க பயன்படுத்துவதுடன் உடலுக்கு நன்கு வாசம் கொடுக்கவும் இதை பயன்படுத்துவது உண்டு.
- வெட்டி வேரை பயன்படுத்துவதற்கு முன்னால் ஒரு 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்தால், அதன் சொரசொரப்பு மாறி கொஞ்சம் மென்மையாக தொடங்கும். அப்போது இதை பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை பழத் தோலை கிடைக்கும் போது எடுத்து வரவரவென்று தேய்த்து பின்னர் துடைத்தோ அல்லது கழுவியோ விட்டால் போதும்.
எரிச்சல் நீங்க

ஒவ்வொரு முறையும் ஏதாவது கலவையை பயன்படுத்தி நீர் விட்டு கழுவி விடும்பொழுது, அந்த இடம் லேசாக சொரசொரப்பாக இருந்து எரிச்சல் உணர்வு தோன்றும். அதை மட்டுப்படுத்த அந்த இடத்தில் கெமிக்கல் குறைவாக உள்ள ஏதேனும் மாய்ஸ்ரைசர் வாங்கி தடவி விட்டு லேசாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் அடங்கி, தோலும் மிருதுவாகிவிடும். இல்லையென்றால் மருந்து கடைகளில் கிடைக்கும் 'வாசலின்' கூட பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்து தடவி விடலாம். ஆனால் அந்தரங்க பகுதியில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கண்டிப்பாக போட வேண்டாம். வேண்டாம் எனில் வீட்டில் உள்ள தேங்காய் எண்ணையே போதும்.
உடனே அவசரமாக நீக்க
ஒன்றிரண்டு நாட்களில் இந்த அக்குள் கருமை நீங்க வேண்டும் என்றால் கோல்கேட் பேஸ்ட் நம் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கோங்க அதோடு கொஞ்சம் தூள் உப்பை சேர்த்து நன்கு கலக்குங்க. அப்படி கலக்குவதால் வரும் கலவையை கருமை உள்ள இடங்களில் மென்மையாக ஆனால் நன்கு தேய்த்து மசாஜ் செய்வது போல தேயுங்க. பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் விட்டுவிட்டு நன்கு கழுவி விடுங்க. இந்த முறையில் ஓரளவுக்கு தான் போகும் என்றாலும் பலன் கிடைத்த திருப்தி உண்டாகும்.
[ கவனம் 'கோல்கேட்' என்பது வெளிப்புற சொரசொரப்பை நீக்கி அல்லது வெளிப்புறத்தில் இருக்கும் செல்களை சேதப்படுத்தி பளபளப்பை உண்டாக்குகிறது. இது பற்களுக்கு வேண்டுமானால் ஓரளவு சரியாக இருக்கலாம். ஆனால் மென்மையான தோலுக்கு இது சரிவராது. அதனால் தோல் கருமையை செயல்படும் விதம் ஓரளவுக்கு மனதிற்கு திருப்தியாக நாம் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தாலும், முற்றிலும் விலக்கி வைக்க வேண்டிய அபாயகரமான குறிப்பு தான். மிகவும் அவசரம் என்றால் மட்டுமே இதனை செய்ய வேண்டும், அதுவும் எப்பொழுதாவது ஓரிரு முறை மட்டுமே. இம்முறையை அடிக்கடி செய்வதால் அந்தப் பகுதியில் புண்களை ஏற்படுத்தி, முன்னை விட மோசமான அருவருக்கத்தக்கதாக அந்த தோலை மாற்றி விடும். இதில் விபரீத பரிட்சை வேண்டாம். ]
விளக்கம்
தேன்
- தேன் தலைமுடியின் நிறத்தை மாற்றாது, நரைக்காது.
- தேனைத் தாராளமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம்; அது முடியை மென்மையாக்கவும், பளபளப்பாக்கவும், ஈரப்பதமூட்டவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தேன் அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது, குறிப்பாக வறண்ட மற்றும் சேதமடைந்த முடிக்கு சிறந்த தீர்வாக அமையும். என்றாலும் நேரடியாக இல்லாமல் வேறு பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்துங்க.
மஞ்சள்
- உடலில் ஏற்படும் கருமையைப் போக்க மஞ்சள் பயன்படுத்தலாம்.
- ஆனால் அதிகப்படியான பயன்பாடு அல்லது தவறான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் மஞ்சள் சிலருக்கு சருமத்தை வறட்சியாக்கலாம்.
கார்ன் ஃப்ளார் மாவு
சோள மாவு தான் கார்ன் ஃப்ளார் மாவு எனப்படுகிறது. இது அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. இது சருமத்திற்கு பொலிவு தரும், கருமையைப் போக்கும்.
ஆவாரம் பூ பொடி
ஆவாரம் பூ பொடி முகப்பரு, கரும்புள்ளி, நிறம் மங்குதல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். முடி உதிர்வது நிறுத்தல், உடல் துர்நாற்றம் நீக்குதல் போன்ற நன்மைகளும் தருகிறது. உடல் மற்றும் சருமத்திற்கு பொலிவையும், குளிர்ச்சியையும் அளிக்கிறது. முக்கியமாக தோல் சுருக்கத்தை இல்லாமல் செய்து, இளமையான தோற்றத்தை அளிக்கும் வரம் இந்த ஆவாரம் பூ பொடி.
கூடாதது
- ஆல்கஹால் கொண்டு தியோடரென்ட் அல்லது கெமிக்கல் கலந்த வாசனை திரவியம் தொடர்ந்து பயன்படுத்தினால் தோலை கருமை படர்ந்து இருக்க செய்துவிடும்.
- நாள் முழுவதும் உடலுக்கு இறுக்கமாக ஆடை அணிவது இன்னும் சொல்லப்போனால் காற்று புக முடியாத இடங்களில் துணிகள் இறுக்கமாக போட்டிருப்பதை தவிர்த்து விடுங்க. இது அந்த மாதிரியான மென்மையான இடங்களில் கருமை படரச் செய்வது மட்டுமல்ல புண்களையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
- சில நேரங்களில் சில நபர்களுக்கு தோலில் ஏற்படும் இந்த கருமை நம்முடைய கவனக்குறைவினால் அல்லது தோளில் வைட்டமின் குறைபாடு, அல்லது ஒரு நோயின் காரணமாக கூட இந்த கருமை படர்தல் ஏற்படலாம். அவ்வாறெனில் கண்டிப்பாக தோல் நிபுணர் அல்லது தோல் மருத்துவரை அணுகுவது முக்கியம். கை வைத்தியம் கூடாது.
- உடலின் அந்தரங்க பகுதிகளில் அதாவது கை அக்குள் பகுதி மற்றும் தொடை எடுக்கப் பகுதிகளில் சுரக்கப்படும் வியர்வையின் காரணமாகவும், இல்லாவிட்டால் அங்கிருக்கும் முடிகளின் காரணமாகவும் ஈரப்பதம் சேர்ந்திருப்பதை காணலாம். காற்று புகாத பகுதி என்பதால் அந்த ஈரப்பதம் எப்பொழுதுமே அந்த இடத்தில் தேங்கி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இவ்வகை ஈரப்பதம் அந்த இடங்களில் கருமை நிறத்தையோ இல்லை கரும்படை மற்றும் புண்களையோ உருவாக்கி விடும். எனவே அவ்விடங்களை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருப்பதும் அவசியம்.
- உடலின் மென்மையான அந்தரங்கமான பகுதிகள் என நினைக்கும் இடங்களில் மருத்துவரின் ஆலோசனையின்றி கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
Tags,
உடலில் கருமை நீங்க மஞ்சள் பயன்படுத்தலாமா, தேன் தலைமுடிக்கு பயன்படுத்தலாமா, தேன் பட்டால் தலைமுடி நரைக்குமா, தேன் முடியை வெள்ளையாக்குமா, அக்குள் கருமை, கழுத்து,இடுப்பு பகுதியில் கரும்படை நீங்க, அக்குள் கருமை எதனால் ஏற்படுகிறது, How to remove darkness in the armpits in tamil, What causes underarm darkening in tamil, அக்குள் கருமை நீங்க, தொடை இடுக்குகள் கருமை நீங்க என்ன செய்ய வேண்டும், முக சுருக்கம் மறைய என்ன செய்ய வேண்டும்,
.
