இந்த தக்காளி ரசம் முன்பு எங்க வீட்டு சின்ன விருந்துக்கு, எங்க பக்கத்து வீட்டு சமையல்காரம்மா செய்ஞ்சாங்க….மறுபடியும் செய்முறை கேட்டு போட்டு இருக்கேன். [ இது விருந்துக்கான தக்காளி ரசம். வீட்ல நமக்கும் முயற்சி செய்யலாம். நல்லாத்தான் இருக்கும். யாரு நம்மள கேட்பா? ]
முன்பே ரெடி செய்து வைக்க வேண்டியவை
- மிளகு, சீரகம் தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து வறலாக அரைத்து வைத்துக்கொள்ளவும்,
- தேவையான அளவு புளியை ஊற வைத்து, பிழிந்து, சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்,
தக்காளி பிசறல்

- தேவையான தக்காளி எடுத்துக்கோங்க,
- அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிசறி விடுங்க,
- இப்போது கொத்துமல்லி தழை கொஞ்சம் காம்புடன் பிய்த்து அதில் தூவி விடுங்க,
- அரை டீஸ்பூன் அளவுக்கு வெல்லம் எடுத்து தூவுங்க,
- கறிவேப்பிலை சிறிது எடுத்து அதையும் சேருங்க,
- தேவைப்படும் அளவுக்கு [ இந்த கலவைக்கு மட்டுமான ] கல் உப்பு சேருங்க,
- அரைத்து வைத்த மிளகுசீரக பொடியைத் தேவைப்படும் அளவு தூவுங்க,
- இரண்டாக நறுக்கி வைத்த பச்சைமிளகாய்களை [ காரத்திற்கு தகுந்தாற்போல ] போடவும்,
இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிவிடுங்க. பிசறி விட்டதை எடுத்து தனியே தனியே வைத்திடுங்க.
ரசம் கூட்டி வைத்தல்
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்…. [ அடுப்பு தீயை மிக மிதமாகவே மாற்றி விடுங்க ]
- சிறிது கடுகு போடுங்க,
- சீரகம் போடுங்க,
- கறிவேப்பிலை போடுங்க,
- தோலுடனோ அல்லது தோல் இல்லாமலோ தேவைப்படும் அளவு இடித்து வைத்த பூண்டை தூவி விடுங்க,
- சில வரமிளகாய்களைப் போடுங்க,
- [ஏற்கனவே தக்காளி பிசறளில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்தோம் ] அதனால் இதற்கு வேண்டிய தூள் உப்பை மட்டும் சேருங்க,
- பச்சைவாசனை போகும் வரை அல்லது கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்குங்க,
- கலர் வந்ததும், வதக்கிக்கொண்டே, ஏற்கனவே பிசறி வைத்த தக்காளி பிசறலை எடுத்து, அப்படியே அடுப்பில் வதக்கிக்கொண்டு இருப்பதில் போடுங்க,
- உடனேயே அத்துடன் ரெடி செய்து வைத்திருந்த புளித்தண்ணீரைக் கொட்டுங்க,
- வதக்குவதை விடாமல் தேவைப்படும் தண்ணீரைக் கலந்துவிடுங்க,
- இத்துடன் மீண்டும் சிறிது கொத்துமல்லி தழையை கிள்ளி போடுங்க,

- இப்போது கொதிக்கட்டும். [ மிக மிதமான தீயை ஓரளவுக்கு பெரியதாக மாற்றி விடுங்க ]
- தளதள என்று மொத்தமாக கொதிக்க விடாமல், லேசாக மட்டும் கொதிக்க விட வேண்டும்,
- நுரை வரத்துவங்கும். பிறகு தக்காளி பிசறல்கள் எல்லாம் நடுவுக்கு வந்து, ஓரத்தில் ரசம் கொத்திக்கத்துவங்கும். அந்த நேரத்தில் ரசத்தை இறக்கிவிடுங்க.
இருங்க! இன்னும் இருக்குங்க…
- வேறு ஒரு தாளிக்கும் வாணலியில் தேவைப்படும் நெய்யை [ அதிக நெய் வேண்டாம் ] ஊற்றி, காயவிடுங்க,
- காய்ந்ததும், கறிவேப்பிலைக் கொத்தை உருவி போடுங்க, வதக்குங்க,
- இதில் பெருங்காயத் தூளைத் தூவி, லேசாக வதக்கிவிடுங்க,
- அடுப்பை அனைத்து விட்டு, இதனை எடுத்து, இறக்கி வைத்திருந்த தக்காளி ரசத்தில் ஊற்றுங்க,
அவ்வளவு தான் தக்காளி ரசம் ரெடி.
Tags,
thakkaali rasam, rasam, தக்காளி ரசம், ரசம், காய்ச்சல் ரசம்,
.
