
நிறைய பேருக்கு அக்குள் பகுதிகளில் வரும் ரோமங்களில் ஒரு அடுக்கு மாதிரி அதன் மேல் ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மொத்தமாக வடிந்து இருக்கும். குளித்தாலும், சுத்தப்படுத்தும் முயற்சிகள் செய்தாலும் அது போகாமல் அப்படியே அப்பிக்கொண்டு இருப்பதைக் காணலாம். இதனால் அங்கு சேரும் வியர்வை ஒருவித வாடையுடன் வெளிவந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்னை அக்குள் பகுதியில் மட்டும் அல்லாமல் உடலில் வெயில் படாத இடம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு எல்லாம் அப்பிக்கொண்டு இருக்கும்.
இதற்கு முக்கியமாக ஒருவித பாக்டீரியா காரணமாக இருக்கிறது. ரகசிய இடங்களில் இருக்கும் முடிகளில் வியர்வையின் காரணமாக ஈர பதங்கள் இருக்கும். அப்பொழுது அங்கு இந்த பாக்டீரியாக்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சிலருக்கு நெஞ்சில் இருக்கும் முடியில் கூட இந்த தன்மை இருப்பதை காணலாம்.
பாக்டீரியா என்றதும் பயந்து விட வேண்டாம். அது மட்டும் அல்ல இது தீர்க்க முடியாத பிரச்சனையும் அல்ல. இது எல்லோருக்கும் நார்மலாக வரக்கூடிய ஒரு பிரச்சனை தான்.
அக்குள் அழுக்கு நீங்குவதற்கு செய்ய வேண்டியவை :
முதல் வழி – அந்த இடத்தில் இருக்கும் அதாவது வியர்வை சுரக்கும் இடங்களில் வளரும் முடிகளை நீக்கி விடுவது. நாம் வழக்கமாக செய்யும் செயல்தான். அதற்கு பிளேடு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் பிளேடு பயன்படுத்தும் போது,

சின்ன சின்னதாக அங்கு இன்பெக்சன் ஆகுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதாவது தடிப்பு தடிப்பாக இருப்பது போல லேசான கொப்பளம் வந்து வலியுடன் கூடிய அரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அதனால் கத்திரிக்கோல் பயன்படுத்துவது நல்லது.
அல்லது ட்ரிம்மர் பயன்படுத்தலாம். இது ஒரு ஆரோக்கியமாக வழிமுறை ஆகும்.

இரண்டாவது வழி – ட்ரிம்மர் வைத்து முடிகளை நீக்கிய பிறகு ஒரு நாள் கழித்து அந்த அழுக்குப்பிடிப்பு எங்கெல்லாம் இருந்ததோ அந்த இடங்களில் மோர் கொண்டு தடவி விட்டு, அது நன்கு காய்ந்தவுடன் குளித்துவிடவும். வாரம் ஒன்றிரண்டு முறை செய்யவும்.
3வது வழி – மோரில் கொஞ்சம் தான் பலன் என்று உணர்ந்தால், மற்றொரு வழி ஆப்பிள் சைடர் வினிகர் [ Apple cider vinegar (ACV) ] பயன்படுத்துவது.

இந்த வினிகரில் ஒரு ஸ்பூன் வினிகர் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கலந்து அழுக்குப்பிடிப்பு இருக்கும் இடங்களில் தடவிவிட்டு, காய்ந்ததும் குளித்துவிடுங்கள். முக்கியம் ட்ரிம்மர் வைத்து முடிகளை எடுத்த ஒரு நாளுக்குப் பிறகு தான் தடவ வேண்டும். வாரம் ஒன்றிரண்டு முறை செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு செய்யும் போது, அந்த இடங்களில் பாக்டீரியா உற்பத்தி குறைந்து, அதன் பாதிப்பும் குறைவதைக்காணலாம். முடியும் இயல்பான முடியாக வளரத்துவங்கும். இதனால் வியர்வை நாற்றம் கூட வெகுவாக குறைந்து, அதனால் ஏற்படும் மனஇறுக்கத்தை இல்லாமல் செய்கிறது.
கவனிக்க வேண்டியவை :
- ஆப்பிள் சைடர் வினிகரை நேரடியாகப் உடலில் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் தண்ணீரில் கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.
- அதிகமாகப் பயன்படுத்துவது அந்த இடத்தின் ஈரத்தன்மையை வறண்டு போகச் செய்யலாம், எனவே வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
- எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் காலின் புறத்தோலில் ஒரு சிறிய பகுதியில் தடவி அலர்ஜி சோதனை செய்வது நல்லது.
பின்குறிப்பு :
1] இந்த பிரச்னை,
- யாருக்கு வியர்வை அதிகமாக சுரக்கின்றதோ அவர்களுக்கும்,
- உடல் பருமன் உள்ளவர்களுக்கும்,
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் – இந்த பிரச்சனைகள் பரவலாக காணப்படும்.
அதனால் திரும்பத்திரும்ப இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால், சக்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உடல் பருமனை முடிந்த அளவு குறைக்க முயற்சி எடுங்கள். வெளிவரும் வியர்வை உடலிலேயே தங்காதவாறு பார்த்துக்கொள்ள இறுக்கமான உடைகளை அணிவதையும் தவிர்த்து விடுங்கள்.
2] இந்தப் பிரச்சனைக்கு பயந்து, கெமிக்கல் கலந்த பொருட்களைக் பயன்படுத்தும் பொழுது, மிகவும் சென்சிடிவ் ஆன அந்தப் பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் வியர்வை வெளிவருவது என்பது உடலுக்கு நல்ல விஷயம். ஆனால் நாம் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருள்கள் வியர்வை வெளி வரும் வழியை அடைத்து விடுகின்றன. இதனால் உடலுக்குள் அழுக்குகள் சேர துவங்குகின்றன. அதனால் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும், அதில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
.
