
உருளைக்கிழங்கு ஆம்லெட்
பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட் போட்டு சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்க்கலாமா?
இந்த ஆம்லெட்டை உணவுக்கு பக்க உணவாக செய்து சாப்பிடலாம். சாதம் ஒரு குழம்பு மட்டும் இருந்தாலும் கூட இந்த ஆம்லெட் இருந்தால் விருந்து சாப்பிட நிறைவு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அதுவும் அவர்கள் ஆம்லெட் விரும்பி சாப்பிடும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு இந்த ஆம்லேட்டை செய்து ஒரு சட்னியோடு பரிமாறலாம், ரசித்து உண்பார்கள்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் நகரத்தில் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள், இல்லையா? அவர்கள் ரொம்ப முனைப்பாக மணிக்கணக்கில் வேலை செய்யும் பொழுது, உணவை சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அவர்களுக்கு இலகுவாக, அதே சமயத்தில் சுவையாக அந்த நேர பசியை மட்டுப்படுத்துவதற்காக செய்யும் ஒரு உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
செய்முறை
- உருளைக் கிழங்குகள் 2 [ ஸ்லைஸ்கள் அல்லது நீள மெல்லிய துண்டுகளாக ]
- முட்டை 3
- உப்பு
- மிளகு தூள்
- பெரிய வெங்காயம் 2 [ நீளநீளமாக வெட்டியது ]
- சமையல் எண்ணெய்
பொரித்தல்
- உங்களுக்கு தேவையான உருளைக்கிழங்குகளைத் தோல் சீவி எடுத்துக்கோங்க,
- அதை மிக மெல்லியதாக ஸ்லைஸ் ஆகவோ அல்லது நீளநீளமாக குச்சி குச்சியாக மிக மெல்லியதாகவோ கட் செய்து வைத்துக் கொள்ளுங்க,
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஊத்திக்கோங்க,
- எண்ணெய் சூடு படுத்துங்க,
- எண்ணெய் நன்கு சூடானதும், தீயை குறைத்து வைத்து, அந்த எண்ணெயில் கட் செய்து வைத்த உருளைக்கிழங்குகளைப் போட்டு பொரித்தெடுங்க.
அடித்தல்
- ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிகோங்க,
- அதில் தேவையான அளவுக்கு உப்பும், மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு அடித்து கலக்குங்க,
வதக்கல்

- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிது மட்டும் எண்ணெய் ஊற்றுங்க,
- அதில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு துண்டுகளையும், நீள நீளமாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் போட்டு லேசாக பிரட்டி விடுங்க,
- [ சுருள வதக்கி விடக்கூடாது. உருளைக்கிழங்கும் வெங்காயமும் வேகும்போது லேசாக சுருங்கி இருந்தால் போதும், வடிவம் சுத்தமாக சுருண்டு விடாதவாறு பார்த்துக்கோங்க ]
- வெந்து விட்டது என்று தெரிந்ததும், எடுத்து பாத்திரத்தில் அடித்து வைத்துள்ள முட்டைகளில் இந்த உருளைக்கிழங்கு வெங்காயம் கலவையை கொட்டுங்க,
- அதில் மேலும் தேவையான அளவுக்கு உப்பையும், மிளகுத்தூளையும் போட்டு நன்கு கலக்குங்க.
வேகவைத்தல்

- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து லேசாக மட்டும் எண்ணெய் ஊற்றி, பாத்திரத்தை ஒரு சுற்று சுற்றினால் எண்ணெய் அந்த பாத்திரத்தின் அடி பகுதி முழுவதும் ஒட்டியது போல வழிந்து விடும்.
- இப்பொழுது அந்த முட்டைக் கலவையை எடுத்து அந்த வாணலியில் கொட்டுங்க,
- முட்டை கலவையை சமன்படுத்துங்க,
- மூடி வைத்து வேக விடுங்க,
- வெந்ததும் எடுத்து விடலாம்.
அடுப்பில் தீ எறிவது மிதமான நிலையில் இருக்கட்டும்
குறிப்பு
- வதக்கும் போது உருளைக்கிழங்கு நிறம் மாறாக கூடாது என்பதால், அதை முன்னரே எண்ணெயில் பொரித்தெடுக்கிறோம்.
- பொறித்த உருளைக்கிழங்கு என்பதாலும், மிதமான தீயில் இருப்பதாலும், மூடி வைத்ததாலும் முட்டை கலவை விரைவிலேயே வெந்துவிடும். நேரம் எடுக்காது.
- விருப்பமிருந்தால் திருப்பி போட்டு வேக வைக்கலாம்.
- தனியேயும் உண்ணலாம். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது சாஸ் உடன் சேர்த்தும் உண்ணலாம்.
அவ்வளவுதான் ‘உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்’ ரெடி.
Tags,
உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்வது எப்படி, உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட், ஆம்லெட் செய்வது எப்படி, How to make a potato omelette, potato egg omelette, how to make an omelette, உருளைக்கிழங்கு ஆம்லெட், potato omelette,
.
