
பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா?
அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம் தரமாக சைவ ஹோட்டல் அளவுக்காவது சுவையான பொங்கலாக அமையட்டுமே! – செய்வோமா?
தேவையான பொருட்கள்
பச்சரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/2 கப்
உப்பு
நெய்
முந்திரி
துருவிய இஞ்சி
கருவேப்பிலை
எண்ணெய்
மிளகு
சீரகம்
பெருங்காயம்

வெண்பொங்கல்
குக்கர் செயல்
- பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் நன்கு தண்ணீரில் 3 அல்லது 4 முறை அலசி நீர் ஊற்றி 1/2 மணிநேரம் ஊறவையுங்க,
- ஊற வைத்ததை தண்ணீர் வடித்து குக்கரில் போடுங்க,
- 1 கப்புக்கு 3 கப் தண்ணீர் வேண்டும். அரிசியும், பருப்பும் சேர்ந்து 1 1/2 ஒன்றரை கப் ஆகிறது, இல்லையா? அதனால் இங்கு 4 1/2 நான்கரை கப் தண்ணீர் ஊற்றுங்க,
- பொங்கலுக்குத் தேவையான உப்பை போடுங்க, கலக்குங்க,
- குக்கரை மூடி வைத்து, விசில் போட்டு, அடுப்புத் தீயில் வைக்கவும்.
- சாதம் நன்கு குழைய வேகவேண்டும். அதனால் சாதாரணமாக நாம் கணக்கு வைத்திருக்கும் விசில் அளவை விட அதிகம் விட வேண்டும்.
[ இதில் அரிசி ஊற வைத்த நேரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.] குக்கர் விசில் தானாக அடங்கும் வரை பொறுங்க. அவசரப்பட்டு விசிலைத் தூக்கிவிட வேண்டாம்.
தாளிப்பு செயல்
- அடுப்பு தீயை மிதமாக வைத்து, வாணலியை அடுப்பில் வையுங்க,
- வாணலி சுட்டதும், அதில் எண்ணெய் 2 பெரிய டீஸ்பூன் மற்றும் அது கூடவே நெய்யும் 2 பெரிய டீஸ்பூன் ஊற்றுங்க,
- காய்ந்ததும் அதில் முதலில் எடுத்து வைத்த தேவையான முந்திரியைப் போட்டு, வறுத்ததும் தனியே எடுத்து வையுங்க,
- அதே எண்ணெயில் தாளிப்பு செய்ய வேண்டும். அதனால் இப்போது அதில் முதலில் சீரகம் 1 சிறிய டீஸ்பூன் போடுங்க,
- மிளகு 1 சிறிய டீஸ்பூன் கம்மியாக போடுங்க, [ சீரகத்தை விட மிளகு கம்மியாக இருக்கவேண்டும்.]
- துருவிவைத்த இஞ்சியை சேருங்க,
அடுப்பு மிக மிதமான தீயில் தான் இருக்க வேண்டும். இல்லையெனில் தாளிப்பு கருகி சுவை கெட்டுவிடும்.
- தேவையாக கறிவேப்பிலை போடுங்க,
- பெருங்காயத்தூள் போடுங்க,
- அடுப்பு தீயை அனைத்து விட்டு, இருக்கும் சூட்டிலேயே வாணலியில் இருப்பதை வதக்கி விட்டு, இறக்கிடுங்க.
இறுதி செயல்
- குக்கர் மூடியைத் திறந்து, சாதம் பதம் பாருங்க, காய்ச்சலுக்கு கஞ்சி செய்து எடுத்து வைத்துவிட்டு ஆறியதும் பார்த்தால் ஒரு பதம் வருமே, அதே போல சாதம் மசிந்து, குலைந்து, நன்கு வெந்து இருக்க வேண்டும்.

- இப்போது அதனுடன் தாளிப்பு செய்ததைக் கொட்டுங்க, [ நெய் சிறிது உண்டுன்னு போட்டிருப்பதால் கொட்டும்போது, நெய் பரவி வாசம் அருமையாக இருக்கும்.]
- அடுத்து அதில் வறுத்து தனியே வைத்த முந்திரிகளைப் போடுங்க,
- இப்போது நன்கு மெதுவாக கிளறி விடுங்க,
- கிளறிய குக்கர் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து, அடுப்பு தீயையும் மிக மிக குறைத்து வைத்து, பொங்கலை மிதமாக கிளறுங்க,
- சிறிது நேரம் கிளறிக்கொண்டே இருங்க, நிறுத்தினீர்கள் என்றால் அடி பிடித்துவிடும்.
அவ்வளவு தான் இறக்கிவிடலாம். பொங்கல் ரெடி.
குறிப்பு
- சுவை கூட வேண்டும் எனில் நெய் அதற்கு தக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்,
- அரிசி ஊற வைத்த நேரத்திற்கும், குக்கர் விசில் விட வேண்டிய எண்ணிக்கைக்கும் கணக்கு வைத்துக்கோங்க, [ இரண்டு முறை தடுமாறினாலும், பிறகு கணக்கு தெரிந்துவிடும்.]
- தாளிப்பின் முழு நேரமும் அடுப்பு தீ மிதமாகவே இருக்கவேண்டும்,
- பொங்கலையும், தாளிப்பையும் கலந்தால் முடிந்தது என்று நினைத்திருப்போம். ஆனால் அதன் பிறகு சிறிது நேரம் மிக குறைந்த தீயில் வைத்து கிளறிவிட்டால் தான் சுவை பொங்கலுடன் கலந்து நன்றாக இருக்கும். அதாவது தாளிப்பில் உள்ள நெய், முந்திரி, மிளகு சீராகத்தின் எசன்ஸ் அதாவது அதனுடைய தன்மைகள் எல்லாம் பொங்கலுடன் கலந்து பொங்கலுக்கு நல்லதொரு சுவையைக்கூட்டும்.
எல்லோரும் பயன்படுத்தும் அதே சமையல் பொருள்கள் தான். ஆனால் செய்யும் முறையில் தான் சுவை கூடுகிறது. அதனால் சிரமம் பார்க்காமல் செய்யும் முறையை சரியாக பிடித்துவிட்டால், பின் எப்போது செய்தாலும் பொங்கல் அருமையாகவே வரும். வீட்டிலும் இட்லி தோசை போலவே இதையும் வழக்கமாக உண்ணும் உணவாக ஏற்றுக்கொவார்கள்.
Tags,
pongal, venpongal, venpongal seivathu eppadi, kovil pongal seivathu eppadi, hotel pongal seivathu eppadi, பொங்கல், வெண்பொங்கல், வெண்பொங்கல் செய்வது எப்படி, கோவில் பொங்கல் செய்வது எப்படி, ஹோட்டல் பொங்கல் செய்வது எப்படி,
.
