காலிஃப்ளவரின் [ Cauliflower ] தமிழ் பெயர் ‘பூக்கோசு’ அல்லது ‘பூங்கோசு’ அப்படின்னு சொல்லுவாங்க. சில இடங்களில் ‘இலைச்சுருளி’ அப்படின்னும் சொல்லுவாங்க. இது காரசாரமா மசாலாவில் ஊற வைத்து, எண்ணெயில் பொரிச்சு எடுக்கிற உணவாகத் தான் அதிகம் செய்யப்படுகிறது. காலிபிளவர் மத்த காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்து நிறைந்தது தான். ஆனாலும் இதை சாப்பிடுறதுனால சிலருக்கு வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை அதாவது அல்சர் இதெல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. அதனால தினமுமோ அல்லது அடிக்கடியோ இந்த காலிபிளவரைச் சாப்பிடுவதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் கவனம் தேவை.

கோபி 65 ன்னு சொல்லப்படும் இந்த காலிபிளவரை எப்படி வருவரு மொறுமொறுன்னு செய்யுறது பார்க்கலாமா?
- 1 காலிபிளவர் பூவை பின்னால் இருக்கும் தண்டை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக பிரித்து வைங்க. [ துண்டின் பின் உள்ள தண்டை முழுவதும் வெட்டிவிட வேண்டாம்.]
- ஒரு பாத்திரத்தில் பச்சை தண்ணீர் [ பச்சை தண்ணீர் தான் ] எடுங்க. தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு, & கால் டீஸ்பூன் மஞ்சள் போட்டு கலக்குங்க.
- அதில் எடுத்து வைத்த காலிபிளவர் துண்டுகளை போட்டு, கலந்துவிட்டு, சிறிது நேரம் மூடி வையுங்க. [ ஏதேனும் புழு இருந்தால் உப்பு மஞ்சளுக்கு வெளியே வந்து இறந்துவிடும் ]
- பிறகு அதனை எடுத்து நீரில் நன்றாக அலசி தனியே வையுங்க.
- ஒரு பாத்திரத்தில் அலசிய காலிபிளவர் பூக்களை போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, 3 துருவிய பச்சைமிளகாய், சிறிது இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றைப் போடுங்க.
- இந்த கலவையை, அதாவது காலிபிளவர் சிறு பூக்கள், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக பிசறி விடுங்க. பூக்களின் மேல் எல்லாம் நன்கு ஓட்டுமாறு பிசற வென்றும்.
- அதில் இப்போது 1 ஸ்பூன் சில்லி பொடி, 1 ஸ்பூன் மட்டன் மசாலா, கலருக்காக 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாத்தூள் போடுங்க.
- இந்த கலவையையும் இப்போது நன்கு ஓட்டும் படி பிசறி விடுங்க. தண்ணீர் சேர்க்க வேண்டாம். வறலாகவே இருக்கட்டும்.
- இதன் மேல் சிறிது பிச்சிவிட்ட கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தழை ஆகியவற்றைத் தூவுங்க.
- இப்போது கிட்டத்தட்ட அரை டம்ளர் அளவு கான்பிளவர் மாவைக் கொட்டி நன்கு பிசறவும். இந்த மாவு இதுவரை கலந்தவற்றை பூவுடன் நன்கு ஒட்டி பிடித்துக்கொள்ள உதவும்.
- மீண்டும் இதில் பச்சரிசி மாவு அதே அரை டம்ளர் அளவு எடுத்து அதையும் நன்கு பிசறி விடுங்க.
- பிறகு சிறிதே சிறிது தெளிக்கும் அளவு மட்டும் தண்ணீர் எடுத்து கலவை மேல் தெளித்து அதையும் சேர்த்து பிசருங்க.
- மூடி வைத்து, அரை மணி நேரம் நன்கு ஊற விடுங்க.
- அரை மணிநேரம் கழித்து அடுப்பில் வாணலியில் எண்ணெய்யை நன்கு சூடு ஏற்றுங்க. எண்ணெய் சூடு ஆகியதும் தீயை மீடியம் அளவில் வைத்து, கலவையில் உள்ள பூக்களை தனித்தனியாக, உதிரியாக தூவினாற் போல எண்ணெயில் போடுங்க.
- 1 நிமிடத்தின் பின்னர் பூக்களை கரண்டியால் நன்றாக பிரட்டி விடுங்க. எல்லா பக்கமும் வேகும் வரை அடிக்கடி பிரட்டிவிடுங்க.
- எண்ணெயின் சலசலப்பு குறைந்து, 5 நிமிடத்தில் நன்றாக மொறுமொறுவென்று ஆகிவிட, இப்போது எடுத்து எண்ணெய் வடிய கண் பாத்திரத்தில் போட்டு விடலாம்.
மீண்டும் அடுத்த ஈடு காலிபிளவர் பூக்களைப் போடுவதற்கு முன்னர், தீயை அதிகப்படுத்தி எண்ணெய்யை, முதல் போல மீண்டும் சூடு ஆகச் செய்து, பின் தீயை மீடியம் அளவில் வைத்து, முதல் போலவே அடுத்தடுத்த பூக்களையும் எண்ணெயில் போட்டு எடுங்க.
நினைச்சாலே சாப்பிடத்தூண்டும் ஒரு சிற்றுண்டி தான் இது, இல்லையா??
Tag,
Cauliflower, காலிபிளவர், califlower, kaliflower, gobi chilli, காலிபிளவர் சில்லி, கோபி சில்லி
