இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட.

இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் மென்மையான, பஞ்சுபோன்ற கேக்குகளாக வேகவைக்கப்படுகிறது. இது பொதுவாக தேங்காய் சட்னி மற்றும் பலவகையான சாம்பாருடன் பரிமாறப்படுகிறது,

நம்மில் பலருக்கும் இந்த இட்லி அந்த அளவுக்கு மென்மையாக வராது, இல்லையா? ‘ஏதோ நானும் இட்லி ஊற்றுகிறேன்’ என்ற பெயரில் தான் வீட்டில் நாம் செய்வோம். ஆனால் நாம் அரைக்கும் முறைகளில் சிறிது முயற்சி எடுத்து சரியான அளவில் பொருட்களைக் கலந்து, முறையாக அரைக்கும் போது, நமக்கும் ‘குஷ்பூ இட்லி’ மாதிரி மெத்தென்று இட்லி கிடைக்கும். அதன் செய்முறை இங்கே கீழே உள்ளது.

  • இட்லி புழுங்கல் அரிசி.. 6 டம்ளர், முழு உளுந்து..1 டம்ளர், வெந்தயம் 2 ஸ்பூன் ஆகியவற்றைத் தனித்தனியாக 7 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • ஊறிய பின் உளுந்தை நன்றாக நீரில் அலசி, வடித்து, வடித்த உளுந்தில் ஊறிய வெந்தயத்தைச் சேர்த்து, கிரைண்டரில் போட்டு நன்றாக பந்து பதத்திற்கு அரைக்க வேண்டும்.
  • உளுந்து அரைக்கும் போது அடிக்கடி தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். உளுந்தும் நன்றாக அரைய வேண்டும்.
  • பதம் பார்த்து அரைத்த உளுந்தை எடுத்து, பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • பின்னர் ஊறிய அரிசியை நன்றாக நீரில் அலசி, வடித்து, தேவையான உப்பு சேர்த்து, கொர கொர பதத்தில் அரைத்து எடுத்து, அதையும் அரைத்த உளுந்து உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.
  • இதற்கு மொத்தம் 40 நிமிடஙகள் ஆகும்.
  • அவ்வளவு தான் மாவு ரெடி. இந்த கலவையை 8 மணி நேரம் மூடி வைக்கவும்.

  • மறுநாள் மாவை நன்கு கலக்கி இட்லி ஊற்றலாம். மாவு கெட்டியாக இருந்தால், இட்லி ஊற்ற எடுக்கும் மாவில் மட்டும் சிறிது தண்ணீர் கலந்து இட்லி ஊற்றவும்.
  • சில நிமிடங்களில் அருமையான மல்லிகைப் பூ மாதிரி மெத்தென்ற இட்லி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!