
முதுகில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதாக உணரத்துவங்கும் வலி நேரம் செல்லச் செல்ல அதிகமாகி ஒரு கட்டத்தில், இடுப்புக்கு மேல் பகுதியை சிறிது அசைத்தாலும் வலி பின்னும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு புள்ளியைச் சுற்றி அலை அலையாக வலியை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டே இருப்போம். பல்லைகடித்து தாங்கினாலும் வலியில் கண்ணில் நீர் நிறைவதை நம்மால் தடுக்க முடியாது.
காரணங்கள்
முதுகில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது போல…..
- கனமான பொருட்களைத் தூக்குதல்,
- உடற்பயிற்சி என்ற பெயரில் முதுகு தசைகளுக்கு அதிக வலு கொடுத்தல்,
- நீண்ட நேரம் ஒரே நிலையில் இருத்தல்,
- எதிர்பாராது திடீர் என்று அசைத்தல்,
- போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருத்தல்,
- ஒழுங்கற்ற நிலையில் அமர்தல்,
- ஒழுங்கற்ற நிலையில் தூங்குதல்.
- உடல்பருமன் கூட ஒரு வகையில்…
இவை எல்லாம் முதுகில் மூச்சு பிடிப்பு ஏற்பட்டு முதுகு வலி வரக் காரணங்களாகும்.
உடனடி முயற்சி
- சூடான நீர் பையினால் ஒத்தடம் கொடுத்தல், மற்றும் சூடான தண்ணீரில் ஒரு குளியல் – இவை தசை இறுகி இருக்கும் இடத்தில் சிறிது இளக்கத்தை ஏற்படுத்தும்.
- வலி இருக்கும் பகுதியின் தசைகளை மெதுவாக மசாஜ் செய்தாலும் தசையில் இளக்கம் உண்டாகும்.
- ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இது அந்த பகுதியில் ஏற்படும் வலி மற்றும் காயங்களை குறைக்கும்.
- அதிகமான தண்ணீரைப் பருகி உடம்பை நீர்ச்சத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
கை வைத்தியம்
வைத்தியம் 1

ஒரு கரண்டி மட்டும் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து கொள்ளவும். ஆறிய பிறகு ஒருவித கெட்டி தன்மையுடன் இருக்கும். அதில் சிறிதளவு சுக்குப் பொடியை சேர்க்கவும். கடையில் சுக்கு பொடி என்றே கிடைக்கும். அதே அளவு பெருங்காத்தூளையும் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு கட்டி கற்பூரத்தை பொடித்து சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து விடவும்.
இந்த கலவையை அடுப்பில் சிறிது நேரம் மட்டும் வைத்திருங்கள். ஒன்று, இரண்டு நிமிடங்கள் கழித்து ஓரங்களில் லேசாக எண்ணெய் படியே ஆரம்பிக்கும். அதனை எடுத்து லேசாக ஆறவிடுங்கள். லேசாக சூடாக இருக்கும் பொழுதே இந்த கலவையை எடுத்து, வலி இருக்கும் சதைப்பகுதியில் தடவ வேண்டும். ஒரு பத்து நிமிடம் கழித்து பார்த்தால், அந்த பற்று நன்கு காய்ந்து, தோல் உடன் பொருந்தி இருக்கும். ஒரு பருத்தி துணியில் அதனைத் துடைத்து எடுத்து விடலாம். இந்த வகையில் நமக்கு ஏற்பட்ட மூச்சுப்பிடிப்பு ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் சிறிது சிறிதாக குறைவதை காணலாம்.
சாதம் வடித்த கஞ்சி – ‘சாதம் வடித்த கஞ்சியா? அது இந்த காலத்தில் எப்படி?’ – என்று கேட்டால் நானும் முழித்தேன் தான். ஆனால் பிறகு என்னுடைய பாணியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். சிறிய குக்கரில் ஒரு அரை டம்ளர் அரிசி எடுத்து எப்போதும் ஊற்றும் தண்ணீர் அளவு போல அல்லாமல், ஒன்று அல்லது ஒன்றரை உங்கள் விருப்பம் போல அதிகமாக தண்ணீரை ஊற்றி எப்போதும் விடும் விசில் எண்ணிக்கை வந்தவுடன் அடுப்பை அனைத்து, சூடு ஆறியதும் திறந்து பார்த்தால், வெந்த சாதத்துடன் நீரும் சேர்ந்து இருக்கும். இல்லையா? இதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
[ நான் இப்படித்தான் எடுத்தேன். ‘இது தான் சாதம் வடித்த கஞ்சியா?’ என்று கேட்டகக்கூடாது… மீ பாவம். ஆனாலும் சிறிது வலி சட்டென்று குறைந்ததை உணர முடிந்தது. ] இது முன்பு ஒரு பக்கமாக பின்னால் இடுப்பில் வந்த போது…. ஆனால் அடுத்த சில வருடத்தில் மீண்டும் இடது முதுகில் வந்த போது வேறு ஒருவர் சொன்னது தான் கீழே உள்ள வெற்றிலை முறை.
வைத்தியம் 2

வெற்றிலையை ஒரு சிறிய கட்டு வாங்கி வைத்துக் கொள்ளவும். சாப்பிட்ட பின்னர், அதில் வேளைக்கு 2 என்று எடுத்து காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டையும் சேர்ந்தார் போல வைத்து அதன் நடுவில் அரை ஸ்பூன் அளவு பெருங்காயத்தூளை வைத்து, நான்காக மடித்து வாயில் போட்டு நன்கு மென்று முழங்கவும்.
இவ்வாறு ஒரு மூன்று நாட்கள் சாப்பிடுங்கள். முதல் வேளை சாப்பிட்ட பின்னரே உங்களுக்கு வலி சிறிதே குறைய ஆரம்பிக்கும் உணர்வு கிடைக்கும். மூன்று நாட்களில் முற்றிலுமாக தசை பிடிப்பு வலி நீங்கிவிட்டதைக் காணலாம். [ இது எனது சுய அனுபவம். நல்ல பலன் கிடைத்தது.]
தாங்க முடியாத வலி இருந்தாலோ, தசைப்பிடிப்பு ஒரே இடத்தில் திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Tag: thasai pidippu, kai vaiththiyam, muthugu vali,
.
