பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம்

எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று பாசிப்பருப்பு பாயாசம் இல்லையென்றால், சேமியா பாயாசம் அப்படித்தானே! சேமியாவில் ஜவ்வரிசி போடுவோம். ஆனால் பாசிப்பருப்பையும் ஜவ்வரிசியையும் சேர்த்து பாயாசம் செய்வது, பொதுவாக நாம் திருமண வீடுகளில் சாப்பிட்டு இருப்போம். இல்லையென்றால் கேள்விப்பட்டிருப்போம். அதனை நம்ம வீட்டிலேயே செய்து பார்த்தால் என்ன? செய்வதற்கு மிகவும் எளிதானது தான். ஒருமுறை முயற்சித்துப் பார்த்தால் சுவை நம்மை விடாது. பார்ப்போமா?

தேவையானவை

  • பாசிப்பருப்பு ஒரு கப்
  • ஜவ்வரிசி அரை கப்
  • சமையல் எண்ணெய்
  • நெய்
  • பொடித்த வெல்லம் 3 கப்
  • தேங்காய் பால் இரண்டு கப்
  • முந்திரி பருப்பு
  • உலர்ந்த திராட்சை
  • ஏலக்காய் பொடி

வறுத்து, வேக வைக்க வேண்டியவை

  • அடுப்பில் வாணலியை வைத்து சூடு படுத்துங்க,
  • வானொலி சூடானதும் அடுப்பை மிதமான தீக்கு மாற்றுங்க, [ இது மிகவும் முக்கியம்.]
  • அதில் ஒரு கப் பாசிப்பருப்பை போடுங்க,
  • ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு லேசாக வருத்துக்கொண்டே இருங்க, [ பாசிப்பருப்பு லேசாக நிறம் மாறினால் போதும்.]
  • இப்போது அடுப்பை அணைத்து விட்டு, அதில் அரைக்கப் அளவுக்கு ஜவ்வரிசி எடுத்து சேர்த்துக்கோங்க.
  • இரண்டையும் சேர்த்து நன்றாக அலசி வையுங்க.
  • ஒரு குக்கரில் அலசிய ஜவ்வரிசியையும், பாசிப்பருப்பையும் போட்டு ஐந்து கப் தண்ணீர் ஊற்றுங்க,
  • அதில் சிறிதே சிறிது மட்டும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளுங்க, [ இது பருப்பு எளிதாக, விரைவாக வெந்து வருவதற்கு உதவும்.]
  • குக்கரை மூடி அடுப்பில் வைத்து மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை விட்டு எடுத்து வையுங்க.

சிலர் இரண்டையும் அதாவது பாசிபருப்பையும், ஜவ்வரிசியையும் தனித்தனியாக வேக வைப்பார்கள். அதாவது ஜவ்வரிசியை ஏற்கனவே ஒரு அரை மணிநேரம் ஊறவைத்து வேக வைத்து எடுத்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களும் தனித்தனியாகவே வேகவைத்து ஒன்றாக கலக்கலாம்.

        இனி பாயாசம் செய்யும் நேரம் முழுவதும் அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.  

வெள்ளக் கரைசல்

  • வேறொரு அடி கனம் உள்ள பாத்திரத்தில் மூன்று கப் பொடித்த வெல்லம் எடுத்துக்கோங்க,
  • அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைய விடுங்க,
  • வெள்ளம் கரைந்தால் போதும், பாகுபதம் வரை விட்டு விட வேண்டாம்.

வறுத்து வைக்க வேண்டியவை

  • வேறு பக்கத்தில், அடுப்பில் ஒரு சிறிய வானொலியில் நெய்யில் முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை வறுத்து வைத்துக்கொள்ளுங்க.

சிலர் ஏலக்காயையும் முந்திரி உலர் திராட்சை மாதிரி நெய்யில் வறுப்பார்கள். இங்கு நாம் ஏலக்காயை பொடித்து வைத்து பயன்படுத்தலாம். சக்கரையுடன் சேர்த்து போதிக்கும் போது எளிதாக இருக்கும்.

பாசிபருப்பு, ஜவ்வரசி பாயாசம் செய்தல்

  • இது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் குக்கரில் இருக்கும் வேகவைத்த பாசிப்பருப்பையும், ஜவ்வரிசியையும் எடுத்து, அதனை நன்றாக மசித்து விடுங்க, [அது ஏற்கனவே குழைந்து தான் இருக்கும். எனவே மசிப்பது எளிது.]
  • இந்த கலவையை மீண்டும் மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிளறி விடுங்க,
  • 4 அல்லது 5 நிமிடத்தில் நன்கு கொதித்து வந்தவுடன் ஜவ்வரிசி ஒன்றை ஒரு கரண்டியில் எடுத்து மசித்து பாருங்க,
  • ஜவ்வரிசி நன்கு மசிந்து விட்டதா? இப்போது இந்த கலவையில் நாம் மற்றொரு அடுப்பில் வைத்து கரைத்து வைத்த வெல்லக் கரைசலை வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்க,

ஜவ்வரிசி மசிந்து இருந்தால் தான் வெல்லத்தை சேர்க்க வேண்டும். இல்லை என்றால் வெல்லத்தில் ஜவ்வரிசி சரியாக வேகாமல் கல்லு போல இருக்கும்.

  • ஊற்றிய பின்னர் அந்த கலவையை லேசா கிளறி விட்டுக் கொண்டே இருங்க,
  • உங்களுக்கு தேவையானில் இன்னொரு கப் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம். [ பச்சை தண்ணீர் வேண்டாம். சுடு நீர் சேர்த்தால் தான் சுவை மாறாமல் இருக்கும்.]
  • மீண்டும் கொதிக்க விடுங்க, லேசா கொதி வந்ததும் அதில் சிறிதே செய்து மட்டும் உப்பு சுவை கூடுவதற்கு சேருங்க, கலந்து விடுங்க,
  • பிறகு அதில் இரண்டு கப் தேங்காய் பாலை ஊற்றுங்க, [ அடுப்பு மிதமான தீயில் இருப்பதால் தேங்காய் பால் திரிந்து போகாமல் இருக்கும்.]
  • மீண்டும் கிளருங்க. கொதிக்க விடுங்கள்.
  • கிளறிக் கொண்டிருக்கும் பாயாசத்தில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, மற்றும் உலர் திராட்சைகளைக் கொட்டுங்க,
  • ஏலக்காய் பொடியையும் தூவி விடுங்க,

அடுத்து குறைந்த தீயே எரிவதால் பாயாசம் நன்றாக கொதிக்காது. மிதமான கொதிநிலையிலேயே இருக்கும்.

  • இப்போது ஒரு 4 அல்லது 5 நிமிடத்திலேயே பாயாசத்தில் போட்ட பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து, சுவையாக வெந்து விட்டது என்பதை உணரத் தொடங்குவீர்கள்,
  • இப்பொழுது அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விடலாம்.

குறிப்பு

  • அடுப்பை எப்பொழுதும் மிதமான தீயிலே வைத்திருங்கள்.
  • பாயாசத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடும் பொழுது, அது பச்சை தண்ணீராக இல்லாமல் நல்ல கொதிக்கின்ற நீரையோ அல்லது மிதமான சூடு இருக்கும் நீரையோ ஊத்தி கொதிக்க விடுங்கள்.
  • தேங்காய் பால் சேர்க்கும் பொழுது மிதமான தீயில் அடுப்பு இருப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால் தேங்காய் பால் திரிந்துவிடும். பாயாசத்தில் பால் ஊற்றுவதற்கு பதில் தேங்காய் பால் சேர்ப்பது பாயாசத்திற்கு இன்னும் சுவை கூட்டும்.
  • பாயசத்தை அடுப்பில் இருந்திருக்கும் பொழுது சிறிது நீர்க்க இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் பாயாசம் ஆறினாலும் ஓரளவுக்கு நீர்க்க இருக்கும். இறக்கும் பொழுதே சிறிது கெட்டியாக இருந்து இறக்கினோம் என்றால், பாயாசம் ஆறிய உடன் இன்னும் அது இறுகிப் போய்விட வாய்ப்பு இருக்கிறது.

அவ்வளவுதாங்க பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம் ரெடி

Tags,

பாசிபருப்பு ஜவ்வரிசி பாயாசம், ஜவ்வரிசி பாயசம், பாசிபருப்பு பாயாசம், பாயசம் செய்வது எப்படி?, கல்யாண வீட்டு பாயசம் செய்வது எப்படி, Gram dal and jawarisi payasam, jawarisi payasam, gram dal and jawarisi payasam, how to make payasam?, how to make payasam for weddings,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top