
உடலில் உள்ள நிகழ்வுத் தன்மையை மேம்படுத்தி, பதற்றத்தை குறைக்க இந்த பட்டாம்பூச்சி போஸ் உதவுகிறது. மிகத் தீவிரமான பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையோ, யோகாசனங்களையோ தினமும் செய்யும்பொழுது உடல் சிறிது இறுக்கமாக தோன்றும். அப்போது உடலை இறுக்க நிலையில் இருந்து, தளர்வடையச் செய்வதற்காக இந்த பட்டாம்பூச்சி போஸ் செய்யப்படுகிறது. இது அமைதியை அதிகப்படுத்துவதுடன் புத்தியை தூண்டி விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.
இது பவுண்ட் அங்கிள் போஸ் [Bound Angle Pose] அல்லது காப்ளர் போஸ் [Cobbler Pose] என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்பவர்களாக இருந்தால், அதன் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ அல்லது இந்த பட்டாம்பூச்சி போஸ் ஐ மட்டும் தனி பயிற்சியாகவோ நீங்கள் செய்யலாம்.
தனி பயிற்சியாக என்றால், நீங்கள் டிவி பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது இல்லையென்றால் பேசிக் கொண்டிருக்கும்போது கூட எந்த நேரத்திலும் நீங்கள் இதை செய்ய முடியும். ரொம்ப எளிமையானது.
இந்த கட்டுரை பட்டாம்பூச்சி போஸ் செய்யும் விதம் பற்றி , அதன் நன்மைகள் பற்றி மற்றும் கர்ப்ப காலத்தில் அது கொடுக்கும் பயன்களைப் பற்றி விவரிக்கிறது.
பட்டாம்பூச்சி போஸ் செய்வது எப்படி
ஆயத்த முறை :
நீங்கள் தரையில் யோகாவிற்கு உரிய துணியையோ அல்லது பாயையோ விரித்து அதில் அமருங்கள். இது உங்களுக்கு நேராக உட்காருவதை எளிதாக்குகிறது.
உடல் வளைவு தன்மையை அதிகரிக்க அதாவது நீட்சித் தன்மையை தீவிரபடுத்த உங்கள் கால்களை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாக பாதங்கள் ஒன்றோடு ஒன்று பார்த்திருக்கும் படி வைக்கவும். முதுகெலும்பும் தோள்களும் நேராக நிமிர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆயத்த நிலையில் பட்டர்பிளை யோகா செய்யும் முறை :
உங்கள் முழங்கால்களை மெதுவாக வளைத்து, உள்ளங்கால்களை ஒன்றாக அழுத்தவும்.
- இரண்டு கால்களையும் பக்கவாட்டில் விரித்து வைத்து, முட்டிகளை மடக்கி, இரண்டு பாதங்களையும் ஒன்றாக ஒன்றை ஒன்று பார்த்தவாறு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- எவ்வளவு தூரம் உங்கள் வயிற்றோடு மடக்கிய கால்களை உங்
- கள் வயிற்றுப பகுதிக்கு அருகில் ஒட்டி வைக்க முடியுமோ அவ்வளவுக்கு ஒட்டி வையுங்கள்.
- உங்கள் கைகளை உங்கள் கணுக்கால் அல்லது முழங்காலுக்கு கீழே காலின் முன்பகுதி கொண்டு சென்று, உங்கள் கால்களின் சுண்டு விரல் பக்கத்தைச் சுற்றி உங்கள் விரல்களை இணைக்கவும்.
உடலை முன் பின் அசைத்தல்
- உடலை நேராக வைத்துக்கொண்டு இரண்டு பக்கமும் விரித்திருக்கும் கால்களை மேலும் கீழும் அசைக்க வேண்டும். பத்து பத்து முறை விட்டு விட்டு செய்யுங்கள். செய்யும் போது விரிந்திருக்கும் தொடைகளை முடிந்த அளவுக்கு கீழே கொண்டு போக வேண்டும்.
- அல்லது மறு முயற்சியாக உங்கள் தோள்களை கீழும் பின்னும் இழுக்கவும்.
- உங்கள் தோள்கள் நேராக இருக்க வேண்டும். கூன் போட்டு அமரக்கூடாது.
- நீங்கள் இதை செய்யும் பொழுது, மேலும் கீழும் கால்களை அசைக்கும் பொழுது, உங்கள் கால்கள் சிறிது சிறிதாக முன்னோக்கி நகரும். அதனை மீண்டும் பழைய நிலைக்கு வயிற்றை நோக்கி இழுத்து நிறுத்த வேண்டும். நிறுத்தி மீண்டும் மேலும் கீழுமாக அசையுங்கள்.
- இந்த நிலையில் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
இறுதி செயல் :
- யோகாசனத்தை செய்து முடித்த பிறகு, இறுதியாக உங்கள் மூச்சை மெதுவாக உள்ளெடுத்து வெளியே விடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது, கால்களை இயல்பு தன்மைக்கு கொண்டு வராமல் எந்த யோகாசன கோஸில் இருந்தீர்களோ அதே போல கால் பாதங்களை கைகளால் பிடித்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிட்டவாறு தலையை கீழே குனியுங்கள். குனிந்து கால் பாதத்திற்கு பக்கத்தில் தலையை கொண்டு சென்று கீழே பாதத்தைத் தொடுங்கள்.
- முதல் நாளே தலையைக் கீழே வரைக்கும் கொண்டு செல்ல முடியாது. தினமும் இந்த ஆசனத்தை இதே போல செய்யும்பொழுது, அது பழக்கத்திற்கு வரும் பொழுது, உடல் எளிதாக வளைக்கும் தன்மை பெற்று, உங்கள் தலையைக் கீழே கொண்டு சென்று பாதங்களை தொடுவதை நீங்கள் காணலாம்.
- போஸை விடுவிக்க, உங்கள் கால்களை முன்னோக்கி நீட்டி, உங்கள் கைகளில் சாய்ந்து கொள்ளுங்கள்.
பட்டாம்பூச்சி ஆசனத்தின் நன்மைகள்
- இந்த யோகாசனம் செய்யும் போது, வயிறு உள் சென்று உங்களுக்கு தொப்பை வருவது தடுக்கப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்படுவதுடன் அங்கு அதிகப்படியாக இருக்கும் சதைப்பகுதி குறைந்து வயிறு ஒட்டி காண்பதை இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பொழுது நீங்கள் காணலாம்.
- இந்த பயிற்சியில் ஆழ்ந்த சுவாசத்தில் கவனம் செலுத்தும் பொழுது, அதாவது மூச்சை மெதுவாக உள்ளெழுத்து வெளிவிடும் பொழுது, உங்கள் மன அழுத்தம் வெகுவாக குறைவதை நடைமுறையில் காணலாம்.
- பட்டாம்பூச்சி ஆசனம் தோற்றம் ஒரு கம்பெறமான தோரணையைப் பெற்று, உங்களுக்கு நன்மதிப்பை வாங்கித்தருவதுடன் உடல் மற்றும் புத்தியில் உள்ள விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது.
- இந்த ஆசனம் கீழ் முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகள் ஆகியவைகளின் வலியைக் குறைத்து, அவற்றுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. மேலும் எளிதாக உடலை இயக்கவும் வழிவகை செய்கிறது.
- பட்டாம்பூச்சி ஆசனம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு இனிமையான, தளர்வான அமைதியைக் கொடுத்து, ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க உதவும்.
- இடுப்பு வலி குறைவு
நாள்பட்ட இடுப்பு வலி உள்ள பெண்களுக்கான சிகிச்சையாக யோகாசனம் இருக்கிறது. இந்த பட்டர்பிளை யோகாசனம் உட்பட பல யோகாசனங்கள் பயிற்சி செய்யும் பெண்கள் ஆறு வாரங்களுக்கு பிறகு, அவர்களின் இடுப்பு வலியின் தீவிரம் பெருமளவு குறைவதை கண்டுள்ளனர். பெண்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் இந்த வலியின் தாக்கம் பெருமளவு குறைவதையும் ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளனர்.
- நினைவாற்றலை மேம்படுத்துகிறது
ஆறு வார வாரங்களுக்கு மேல் பயிற்சி செய்யும் போது, நினைவாற்றல் திறன்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும் பதட்டம் மற்றும் மன அழுத்த அளவுகளில் குறைவையும் காணலாம். இது யோகாசனம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களின் ஆய்வில் உறுதி செய்யப்பட்ட கருத்து ஆகும்.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது
உடல் இயக்கத்தில் அசைவுகரியத்தையும், வலிகளையும் உணரும் பெண்கள் இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது, அவை குறைந்து ஒரு அமைதியான, நிதானமான நிலையினை உணரலாம். இந்த நிலை மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், அதிலிருந்து விடுபடுவதற்கும் உதவுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகாசனம் செய்பவர்கள் தங்கள் மனசோர்வில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடுவதை யோகாசன ஆய்வின் மூலம் கண்டுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் பட்டாம்பூச்சி போஸ் பயிற்சி செய்வதன் நன்மைகள்
உங்கள் பிரசவத்திற்கு முந்தைய யோகா பயிற்சியில், கர்ப்ப காலத்தில், இந்த பட்டாம்பூச்சி போஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் கீழ் முதுகு, இடுப்பு மற்றும் உள் தொடைகளில் உள்ள பதற்றம் மற்றும் இறுக்கத்தை நீக்க உதவி செய்கிறது, இது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தளர்வை ஊக்குவிக்கிறது.
இந்த ஆசனம் மனா, உடல் வலிமையை உருவாக்கி, உங்கள் இடுப்பு இருக்கும் தசைகளில் சுழற்சியை அதிகரிக்கிறது. இந்த நன்மைகள் பிரசவத்திற்கு உடல் ரீதியாக தயார்படுத்தி, ஒரு சுமூகமான பிரசவத்தை பெண்களுக்கு அளிக்கிறது. மேலும் பிரசவ வழியையும் ஓரளவு குறைக்கிறது.
பட்டாம்பூச்சி போஸி – வேறு நிலைகள்
- உடலை நீட்டி முன்னோக்கி வளைக்கும் பட்டாம்பூச்சி போஸ்
- பின்னால் சாய்ந்த நிலை பட்டாம்பூச்சி போஸ்
- சுவற்றின் மேல் கால்களை அமைக்கும் பட்டாம்பூச்சி போஸ்
ஒரே ஒரு இந்த எளிமையான ஆசனம் உங்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு மிக அதிகப்படியான பயன்களை கண்டிப்பாக அளிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் கண்டிப்பாக நீங்கள் எல்லோருமே இதை தினமும் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் உடல் வளைவுத் தன்மை கொடுப்பதுடன், உறுதி தன்மையும் அதிகரிப்பதையும், தொப்பை குறைவதையும் கண்கூடாக பார்க்கலாம். அடுத்த பதிவில் சந்திப்போம் தோழிகளே.
