
காரசாரமான பொரியல், அவியல் ன்னு எதோ கொஞ்சம் இருக்கு…ஆனா பிசைஞ்சி சாப்பிட மட்டும் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதா பாரேன்? – யோசிக்கிறீர்களா???????
கெட்டி தயிர் இருக்கா? அப்போ சட்டுன்னு சூடு ஆறிடறதுக்குள்ள மோர் குழம்பு செய்ஞ்சிடலாமா?
ரொம்ப புளிக்காத கட்டி தயரா உங்களுக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கோங்க. அது கூட ஒரு அரை கப் அளவுக்கு தண்ணியும் சேர்த்து கரண்டி வச்சு நல்ல அடிச்சு விட்டுக்கோங்க. கொஞ்சம் கூட கட்டி இல்லாம நல்லா முட்டை அடிக்கிற மாதிரி அடிச்சுக்கணும். மிக்ஸ்சி-ய விட கை பெஸ்ட். எந்த அளவுக்கு தண்ணி ஊத்தணும் அப்படிங்கறது உங்களுக்கு எந்த அளவுக்கு அந்த கிரேவி வரணும்னு நினைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ரொம்ப தண்ணியா இருக்க கூடாது, அதே மாதிரி ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது. இப்ப நல்லா கடைஞ்சு விட்டாச்சா அவ்வளவுதான் இதை எடுத்த தனியா வச்சிரலாம்.
அடுத்து ஒரு குழம்பு வைக்கிற பாத்திரத்துல இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் போட்டு சூடு பண்ணுங்க. [அடுப்ப பத்தவைக்கனுன்னு சொல்லனுமா, என்ன?] எண்ண லேசா சூடானதும், ஒரு அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கணும். கடுகு நல்லா பொரிஞ்சு வரட்டும். கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறம் ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்த்துக்கோங்க. நம்ம தாளிக்கிறப்ப வெந்தயம் சேர்த்தா அதுல இருந்து வர வாசனை ரொம்பவே நல்லா இருக்கும். அடுத்தது கொஞ்சம் பொடியாக நறுக்கின இஞ்சியையும், பூண்டையும் அதுல தூவி விட்டு ரெண்டு பிரட்டு பிரட்டுங்க. நிறம் மாறாமல் வதக்கி இருந்தால் போதும்.
நம்ம முதல்ல தாளிக்கும்போதே காஞ்ச மிளகாயும், கருவேப்பிலையும் சேர்த்தோம்னா வெங்காயம் நல்லா வதங்கி வர்றதுக்குள்ளயே இது நிறம் மாறி கருகிப் போயிடும். அதுனால இப்ப இந்த நேரத்துல ரெண்டு காஞ்ச சிவப்பு மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வதக்குங்க.
சரி இப்போ அடுத்து ரொம்ப முக்கியமா ஒரு விஷயம் செய்யணும். அதாங்க அடுப்பை கொஞ்சம் சிம்ல வைக்கணும். இல்லனா நம்ம இதுக்கப்புறம் சேர்க்க போற மிளகாய் தூள் வதக்கும் போது கருகி போய்டும். அடுப்ப சிம்ல வெச்சாச்சா… இப்போ வெங்காயம் நல்லா வதங்கினதுக்கு அப்புறம் அதுல ஒரு கால் ஸ்பூன் தனி மிளகாய் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ,கொஞ்சம் மஞ்சள் தூள் எல்லாத்தையும் சேர்த்து லேசா வதக்கணும்.
போதுமான அளவுக்கு வதக்கி முடிச்சதுக்கு அப்புறம், நம்ம தயிர் கரைச்சு தனியா வச்சிருக்கோம் இல்லையா, அதை இதுல சேர்க்கணும். அடுப்பை நம்ம சிம்ல இருக்கறதால நல்ல சூடு ஏறி இருக்கிற பாத்திரம், கொஞ்சம் சூடு இறங்கி தேவையான அளவுக்கு மட்டும் சூடா இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. ஏன்னா தயிர் சூடா இருக்கிற பாத்திரத்தில் போட்டு கலக்கக்கூடாது. திருஞ்சி போயிடும். அதனால சிம்ல வச்சு லோ ஃபிளேம்ல இருக்கும் போது பாத்திரம் சூடு கொஞ்சம் கம்மி ஆயிடுச்சா அப்படின்னு பார்த்ததுக்கு அப்புறம் எடுத்து வச்சிருக்கிற தயிரை அதோட சேர்த்துகலந்து விடுங்க. அப்புறம் அதுக்கு தேவையான அளவுக்கு உப்பு போட்டு அதையும் கலந்து விட்டுக்கோங்க. இது நல்லா கொதிக்கனும்னு அவசியமே கிடையாது. லேசா சூடு பண்ணா மட்டும் போதும்.
ஒரு ரெண்டு மூணு நிமிஷம் நல்லா சூடு பண்ண பிறகு நம்ம ஸ்டவ்வ ஆஃப் பண்ணிடலாம். இந்த கிரேவி ஆற ஆற இன்னும் கொஞ்சம் இறுகி கெட்டியாகும். அதனால அதுக்கு தகுந்த மாதிரி நம்ம முன்னாடியே தண்ணி சேர்க்கறது கணக்கு வச்சுக்கணும். அவ்வளவுதான் இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி விட்ருங்க. சுவையான மோர் குழம்பு ரெடி.
ரொம்ப குழைவா சுட சுட இருக்கிற சாதத்துக்கு, கூட ஏதாவது காரசாரமான தொட்டுக்கறதுக்கு வச்சிக்கிட்டு, இந்த மோர் குழம்போட சேர்த்து சாப்பிட்டோம் அப்படின்னா டேஸ்ட் அல்லும். அவசரத்துக்கு அடிக்கடி இதையே செஞ்சு சாப்பிடுவீங்க.
