
கோதுமை தோசை
அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு வந்துவிட்டாலோ உடனே ‘எடுடா அந்த கோதுமைய…ஊத்துடா தோசைய…’ என்று எடுத்து, கரைத்து, ஊற்றுவதற்கு மிக மிக எளிதான சமையல், இந்த கோதுமை மாவில் ஊற்றி சுடும் தோசை தான். அதை தான் இங்கு பார்க்க போகிறோம்.

பொதுவாக கோதுமை மாவை மட்டும் சரசரவென்று எடுத்து சலித்து கொட்டி, உப்பு மற்றும் நீர் விட்டு கரைத்து வைத்து தோசை ஊற்றினாலும் அது கோதுமை தோசை தான். தொட்டுக்கொள்ள சுவையான சட்னி இருந்து விட்டால், இந்த வெறும் கோதுமை மாவு தோசை கூட மிக அருமையாகவே இருக்கும். ஆனாலும் சிறிது சிரமம் எடுத்து இந்த கோதுமை மாவில் இன்னும் சில சமையல் பொருட்கள் சேர்த்து, தோசையாக ஊற்றும் போது, இன்னும் ஒன்று இரண்டு தோசைகள் அதிகமாக வீட்டில் உள்ளோருக்கு உள்ளே இறங்கும். அப்படி சேர்க்கப்படும் பொருள்கள், விரும்பி சமையல் செய்யும் நபர்களுக்குத் தகுந்தாற் போல, அவர்களின் கற்பனைத் திறத்திற்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். நாமும் இங்கு அவற்றில் 2 அல்லது 3 செய்முறைகள் மட்டும் பாப்போம்.
செய்முறை 1 [ மொறுமொறு கோதுமை தோசைக்கு ]
- கோதுமை மாவு 1 டம்ளர்
- ரவை 2 குழம்பு கரண்டி
- அரிசி மாவு 2 குழம்பு கரண்டி
- உப்பு தேவையான அளவு

கரைத்து ஊற்றுதல்
- ஒரு தண்ணீர் துளி இல்லாத காய்ந்த பாத்திரத்தில் கோதுமை மாவு 1 டம்ளர் போடுங்க,
- அதில் ரவை 2 டேபிள் ஸ்பூன் சேருங்க,
- அதன் மேல் அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் போடுங்க,
- தேவையான உப்பு போடுங்க,
- எல்லா மாவையும் கிளறி விட்டு கலந்து விடுங்க,
- வழக்கமாக தோசை மாவு பதம் இருப்பதற்கு மேல் கொஞ்சம் அதிகமாகவே தண்ணீர் ஊற்றி மாவைக் கரைத்து விடுங்க,
- சிறிது நேரம் கழித்து, தோசைக்கு கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும், அடுப்பை மிதமான தீயில் வையுங்க,
- வைத்ததும், தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுங்க.
பொதுவாக தோசையை ஊற்றும் போது நடுவில் ஊற்றி பக்க பகுதிக்கு இழுத்து விடுவோம். ஆனால் கோதுமை தோசையில் முதலில் பக்க பகுதில் சுற்றி ஊற்றிக் கொண்டு நடுவுக்கு வந்து நிறுத்த வேண்டும். அப்போது தான் தோசை இழுத்து சுற்றுவதற்கு வசதியாக இருக்கும், வட்டமாகவும் வரும்.
அவ்வளவு தான் ‘மொறுமொறு கோதுமை தோசை’ ரெடி
=============================================================
செய்முறை 2 [ மொறுமொறு கோதுமை தோசைக்கு ]
- கோதுமை மாவு 1 டம்ளர்
- ரவை 1/2 டம்ளர்
- கடலைமாவு 1/4 டம்ளர்
- உப்பு தேவையானது
- சக்கரை சிறிது மட்டும்
- புளிக்காத தயிர் 1/2

அரைத்தல்
- ரவை 1/2 டம்ளர் + சிறிது சக்கரையை மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மாவாக அரைத்து வையுங்க.
கரைத்து ஊற்றுதல்
- ஒரு தண்ணீர் துளி இல்லாத காய்ந்த பாத்திரத்தில் கோதுமை மாவு 1 டம்ளர் போடுங்க,
- மாவாக்கி அரைத்து வைத்த ரவை + சக்கரை மாவை அதில் கொட்டுங்க,
- கடலைமாவைப் போடுங்க,
- உப்பு தேவைக்கு போடுங்க,
- அதோடு கூட புளிக்காத தயிர் சேருங்க,
- இப்போது மொத்தமாக அவற்றைத் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வையுங்க.
- சிறிது நேரம் கழித்து, தோசைக்கு கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும், அடுப்பை மிதமான தீயில் வையுங்க,
- வைத்ததும், தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுங்க.
கோதுமை தோசைக்கு எப்பொழுதுமே மாவு ஓரளவுக்கு தண்ணியாக தான் இருக்க வேண்டும். 'தோசைக்குத் தானே' - என்று திக்காக இருக்க கூடாது. ஓரளவுக்கு நீர்க்க இருந்தால் தான் கோதுமை தோசை நன்றாக வரும்.
அவ்வளவு தான் ‘மொறுமொறு கோதுமை தோசை’ ரெடி.
=========================================================
செய்முறை 3 [ மெதுமெது கோதுமை தோசைக்கு ]

- கோதுமை மாவு 1 டம்ளர்
- சீரகம் 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் தூளாக நறுக்கியது 2
- இஞ்சி துருவியது சிறிதளவு
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கறிவேப்பிலையை நறுக்கியது
- சர்க்கரை
கரைத்து ஊற்றுதல்
- ஒரு தண்ணீர் துளி இல்லாத காய்ந்த பாத்திரத்தில் கோதுமை மாவு 2 டம்ளர் எடுத்துக்கோங்க,
- அதில் சீரகம் 1 டீஸ்பூன் போடுங்க,
- தூளாக நறுக்கிய பச்சைமிளகாய் சேருங்க,
- சிறிது மட்டும் துருவிய இஞ்சி சேருங்க,
- கொஞ்சம் பெருங்காயத்தூள் சேருங்க,
- தேவையான உப்பு போடுங்க,
- சிறிது கறிவேப்பிலையை நறுக்கி போடுங்க,
- சிறிது சர்க்கரையை சேருங்க,
- எல்லாவற்றையும் மாவு தோசைக்கு போல அல்லாமல் கோதுமை மாவு தோசைக்குத் தகுந்தாற் போல நீர்க்க கட்டி இல்லாமல் கரைத்து வையுங்க,
- சிறிது நேரம் கழித்து, தோசைக்கு கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும், அடுப்பை மிதமான தீயில் வையுங்க,
- வைத்ததும், தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுங்க.
பொதுவாக சர்க்கரை சுவை கூட்டுவதற்கும், முறுகல் தன்மை கிடைக்கவும் சேர்ப்பார்கள். அது அவசியம் இல்லை என்று சேர்க்காமல் விட்டாலும் விடலாம். தவறில்லை. இதில் ரவை சேர்க்கவில்லை அல்லவா...அதனால் மொறுமொறுப்பு வராது.
அவ்வளவு தான் .’மெதுமெது கோதுமை தோசை’. ரெடி
===========================================================
அடிப்படையில் கோதுமை மாவையும் உப்பையும் மட்டும் வைத்து, ஒவ்வொருவரும் நம் கற்பனை திறமைக்கு ஏற்பவும், நமக்குத் பிடித்த விதத்திலும் பொருட்களை சேர்த்து தோசை ஊற்றலாம். தாளித்து கொட்டியும் தோசை ஊற்றலாம், வெறும் தோசையாக இல்லாமல் வெங்காயம் தக்காளி சேர்த்து கோதுமை அடையாக கூட ஊற்றலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
Tags,
godhumai maavil dosai suduvathu eppadi, godhumai dosai, godhumai ravai dosai, godhumai maavu ravai dosai, கோதுமை தோசை செய்வது எப்படி, How to make wheat dosa, கோதுமை தோசை, கோதுமை ரவை தோசை, கோதுமை தோசை வகைகள், godhumai dosai, kothumai thosai,
.
